மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் லைட்டிங் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் எல்இடி பல்புகள், டியூப் லைட்டுகள் மற்றும் பவர் பேங்க்களை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் விற்பனை பிந்தைய சேவைகளையும் வழங்குகிறது.
இந்நிறுவனம் கிழக்கு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் அனைத்து மின்னணு தேவைகளையும் ஒரே இடத்தில் இது வழங்குகிறது. இந்நிறுவனம் தற்போது 16 சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. மேலும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 4 புதிய கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் (Mehai Technology) நிறுவனம் தனது வர்த்தக வளர்ச்சியை நோக்கமாக கொண்டு பல்வேறு வணிக ஒப்பந்தங்களை பெற தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க அரசின் அலிபூர் மண்டலத்தின் பொது சுகாதார பொறியியல் இயக்குனரகத்திடம் இருந்து 40,00,000 மதிப்பிலான புதிய ஆர்டரை இந்நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடி ரோட்டரி ரிக் முறையை பயன்படுத்தி தக்ஷின் துர்காபூரில் உள்ள இரண்டு 360 மீட்டர் ஆழமுள்ள குழாய்க் கிணறுகளை அமைப்பதற்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 45 நாட்களுக்கும் இந்நிறுவனம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.32 கோடியாகும். சிறிய நிறுவனமாக இருந்தாலும் மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் தொடர்ந்து லாப கணக்கை காட்டி வருகிறது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.50 லட்சம் ஈட்டியிருந்தது. இந்நிலையில், கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்து வருகிறது. 2023 ஜூன் காலாண்டில் ரூ.14 லட்சமும், செப்டம்பர் காலாண்டில் ரூ.23 லட்சமும் நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் பங்கு விலை ரூ.30.10ல் முடிவுற்றது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 40 காசுகள் அதிகரித்து ரூ.30.50ஆக இருந்தது.
2023 பிப்ரவரி 23ம் தேதியன்று இப்பங்கு தனது 52 வார குறைந்த விலையான ரூ.12.30ஐ எட்டியது. அதுமுதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் அளித்துள்ளது. 2023 டிசம்பர் 29ம் தேதியன்று இப்பங்கு தனது புதிய 52 வார உச்ச விலையான ரூ.34.64ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications