பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய தேவைகளுக்காக உயர்தர பொறியியல் பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனம் ஏரோலோய் டெக்னாலஜிஸ்.
இந்நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு சாதனங்களுக்கான டைட்டானியம் மற்றும் சூப்பர் அலாய் வார்ப்புகளை தயாரித்து வழங்குகிறது. இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு ஏற்றுமதியும் செய்கிறது.

இந்த ஸ்மால்கேப் நிறுவனமான பிடிசி இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.20.11 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் 2023 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.9.26 கோடியும், செப்டம்பர் காலாண்டில் ரூ.5.48 லட்சம் கோடியும் ஈட்டியுள்ளது.
இதன் வாயிலாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 80 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு நிப்டியில் 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவதால் முதலீட்டாளர்கள் விரும்பும் ஒரு பங்காக விளங்குகிறது.
இந்த சூழ்நிலையில் பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏரோலோய் டெக்னாலஜிஸ் டைட்டானியம் காஸ்டிங் உதிரிபாகங்களை தயாரித்து வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஏரோலோய் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரபேல் மல்டிரோல் போர் விமானம் மற்றும் பால்கன் பிசினஸ் ஜெட் திட்டத்துக்கான முழு அளவிலான டைட்டானியம் காஸ்டிங் பாகங்களை தயாரிக்கும். ரபேல் போர் விமான நிறுவனத்திடம் இருந்து வர்த்தக ஒப்பந்தத்தை ஏரோலோய் டெக்னாலஜிஸ் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியானதையடுத்து, கடந்த புதன்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பிடிசி இண்டஸ்டரீஸ் நிறுவன பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது.
கடந்த 17ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.7,682.55ஐ எட்டியது. பின்னர் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதால் பங்கு விலை சரிவை சந்தித்தது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.7,166ல் முடிவுற்றது.
நேற்று இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.11 சதவீதம் குறைந்து ரூ.7,158.00ஆக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில், ரூ.141.24 கோடி வரை நிதி திரட்டும் ஒரு உத்திக்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அனுமதி அளித்துள்ளதாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications