மும்பை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி 400 இடங்கள் வரை கைப்பற்றும் என கூறி இருந்தன. இதன் காரணமாக நேற்றைய தினம் பங்குச்சந்தை உச்சத்தை எட்டியது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி உச்சத்தை எட்டின. அரசு துறை சார்ந்த பங்குகள் நேற்று எந்த அளவு உச்சத்தை எட்டியதோ இன்று அதை விட பல மடங்கு சரிவை கண்டு வருகின்றன.

குறிப்பாக ரயில் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் காலை வர்த்தகத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் சரிவடைந்தன. தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகள் ஆகியவை காரணமாக ரயில்வே துறை பங்குகள் கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்தன. தேர்தல் முடிவுகளில் ஆரம்ப கட்டத்தில் பாஜக – இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக ரயில்வே துறை பங்குகள் சரிவில் இருக்கின்றன.
Ircon International நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 மணி அளவில் 15% வரை சரிவை கண்டிருந்தது. IRFC நிறுவனத்தின் பங்கு மதிப்பும் நண்பகலில் 11 % வரை சரிவடைந்தது. Titagarh நிறுவன பங்கு மதிப்பு 19%, RVNL பங்கு மதிப்பு 11% , IRCTC பங்கு மதிப்பு 12% என நண்பகலில் பெரும்பாலான ரயில்வே நிறுவன பங்குகள் சரிவிலேயே இருந்தன.
மேக் இன் இந்தியா திட்டம் உள்ளிட்டவை காரணமாக நல்ல லாபம் தரக்கூடிய பங்குகளாக ரயில்வே துறை பங்குகள் காணப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவு எதிரொலியால் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்ட அச்சம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கிறது.
பொதுவாக பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே துறை பங்குகள் மோடி பங்குகள் என அழைக்கப்படுகின்றன. இத்துறைகளில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும் அரசு இந்த துறைகளுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்குவதாலும் இந்த துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி பாதையில் இருந்தன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications