மும்பை: இந்திய பங்குச்சந்தையில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட ஒரு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறார், எந்த நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்கிறார் என்பன உள்ளிட்டவை பங்குச்சந்தையில் உள்ளவர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
ஏனெனில் பெரும்பாலானவர்கள் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீடு உத்திகளை பின்தொடர்ந்து தங்களது முதலீடு சார்ந்து முடிவுகளை எடுப்பார்கள். ராகேஷின் மறைவுக்குப் பிறகு அவரது போர்ட்போலியோ அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவால் இயக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என ரேகா ஜுன்ஜுன்வாலா எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ரேகா ஜுன்ஜுன்வாலா கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொத்தம் 26 நிறுவனங்களில் தன்னுடைய பங்குகளை வைத்திருந்தார். அவரது மொத்த பங்குகளின் மொத்த மதிப்பு 4.9 பில்லியன் டாலர்கள்.
26 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரேகா ஜுன்ஜுன்வாலா டாடா கம்யூனிகேஷன்ஸ், கிரிசில், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், புரொடெக்டிவிட்டி என்ஹேன்சர்ஸ், கனரா வங்கி ஆகிய ஐந்து நிறுவனங்களில் இருந்த தன்னுடைய பங்குகளில் கணிசமாக அளவு பங்குகளை இவர் விற்பனை செய்துள்ளார்.
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளின் அளவை இவர் குறைத்திருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்டில் 7.34 லட்சம் ஈக்விட்டி பங்குகளை அவர் விற்பனை செய்துள்ளார். இந்த பங்கு விகிதத்தை 1.84%இல் இருந்து 1.58%ஆக இவர் குறைத்துள்ளார். கிரைசில் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளின் விகிதத்தை 5.47%இல் இருந்து 5.44% என குறைத்துள்ளார். அதாவது 20,000 பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் 44.28 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். அதாவது அவரது பங்கு விகிதம் 4.66%இல் இருந்து 4.07%ஆக குறைந்துவிட்டது. அதே போல ராகவ் புரொடெக்டிவிட்டி என்ஹேன்சர்ஸ் நிறுவனத்தில் 12,400 பங்குகளை விற்பனை செய்துள்ளார். என்சிசி நிறுவனத்தில் 38.07 லட்சம் பங்குகளையும், கனரா வங்கியில் இருந்து 1.13 கோடி பங்குகளையும் அவர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில் கே.எம்.சுகர் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 5 லட்சம் ஈக்விட்டி பங்குகளை இவர் வாங்கியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications