மும்பை: இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நிறுவன பங்குகளும் மல்டி பேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்துள்ளன. அந்த வகையில் திரிவேனி டர்பைன் லிமிடெட் (Triveni Turbine Ltd) நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 450 % லாபத்தை பெற்று தந்துள்ளது.
திரிவேனி டர்பைன் லிமிடெட் நிறுவனம் நீராவி விசையாழிகளை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி உபகரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி ஆலைகள் கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 75 நாடுகளை சேர்ந்த 20 தொழில்களுக்கு இந்த நிறுவனம் 6000 நீராவி விசையாழிகளை வழங்கியுள்ளது. பெரும்பாலும் ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் லத்தின் அமெரிக்கா ,தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நிறுவனம் நீராவி விசையாழிகளை வழங்கி வருகிறது.
திரிவேனி டர்பைன் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு மே 14ஆம் தேதி 565 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது 97 ரூபாய் என்ற அளவில் இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனம் 450 % க்கும் அதிகமான லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.
கடனே இல்லாத இந்த நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டில் மட்டும் 32 % அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 17,624 கோடி ரூபாயாக இருக்கிறது. திரிவேனி டர்பைன் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் 52 வார கால சரிவு 316 ரூபாயாகவும், 52 வார கால உச்சம் 596 ரூபாயாகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் என்பது 54.6 என்ற அளவில் உள்ளது. அதாவது இதனை யாரும் அதிகமாக வாங்கவும் இல்லை அதிகமாக விற்பனை செய்யவும் இல்லை என்ற அளவீட்டில் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 55 % புரமோட்டர்கள் வசமே உள்ளது. 44 % பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர் .இதன் ஃபேஸ் வேல்யூ 1 ஆகவும் புக் வேல்யூ 27.91 என்ற அளவிலும் இருக்கிறது.
கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 68 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது ஓராண்டு காலத்தில் 30% உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் வருமானம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 448.92 கோடியாக உள்ளது. ஓராண்டுக்கு முன்பு இது 337 கோடியாக இருந்தது. திரிவேனி டர்பைன் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 1 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஈக்விட்டு பங்குக்கு ரூ.1.30 ஈவுத்தொகை வழங்கி இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications