சென்னை: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலையாக வைத்துள்ளது. ஆனால், செப்டம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கப் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகளவில் வெளியேறி இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சத்தை இன்று எட்டியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் இத்தகைய முடிவு ஏற்கனவே கணிக்கப்பட்டது என்றாலும் நிஃப்டி 50 குறியீடு 25,000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 82,000 புள்ளிகளையும் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

புதன்கிழமை காலை 9:23 மணிக்கு, சென்செக்ஸ் 345 புள்ளிகள் அதிகரித்து 82,043 புள்ளிகளாகவும், நிஃப்டி 117 புள்ளிகள் உயர்ந்து 25,068 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி புதிய உச்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்க்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் சென்செக்ஸ் 82000 புள்ளிகளில் இருந்து இறங்கியது, 11.40 மணியளவில் சென்செக்ஸ் வெறும் 153 புள்ளிகள் உயர்ந்து 81,900 புள்ளிகளில் உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 74.60 புள்ளிகள் உயர்ந்து 25,025 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பவர்கிரிட், என்டிபிதி, நெஸ்லே, ஹெச்டிஎப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது. இதேவேளையில் மஹிந்திரா, டாடா ஸ்டீல், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், கோட்டாக் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, அல்டராடெக், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் சரிவில் உள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை எதிர்பார்த்தபடி நிலையாக வைத்துள்ளது. ஆனால், ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவெல்-ன் பேச்சும், கருத்துக்களும் வட்டி விகிதம் குறைப்பு குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடே இந்தியச் சந்தையும், ஆசியச் சந்தையும் வளர்ச்சியுடன் துவங்கியிருப்பது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி மெட்டல் 1.5 சதவிகிதம், நிஃப்டி வங்கி 0.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிஃப்டி ஆட்டோ, ஐடி, நுகர்வோர் பொருட்கள், எண்ணெய் மற்றும் வாயு துறைகளும் உயர்ந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளின் குறியீடுகளான நிஃப்டி ஸ்மால்கேப்100 மற்றும் நிஃப்டி மிட்கேப்100 குறியீடுகள் முறையே 0.3 சதவிகிதம் மற்றும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
தொடர்ந்து லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து டாட்டா ஸ்டீல் பங்கு 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதிகரித்த உற்பத்தி மற்றும் குறைந்த செலவு காரணமாகக் கால் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து கோல் இந்தியா பங்கு 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications