வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 552.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 41,893 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 143 புள்ளிகள் அதிகரித்து, 12,263 ஆகவும் முடிவடைந்துள்ளது.
சரி என்ன காரணம் ஏன் இந்த ஏற்றம்? வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யாதது கொரோனா செய்துவிட்டது.. டிஜிட்டல் பொருளாதாரம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்றம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமையன்று, அதன் சில்லறை வர்த்தகத்திற்காக 9,550 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி நிறுவனம் கூறியது. இந்த நிலையில் அதன் பங்கு விலை இன்று 3% அதிகரித்து காணப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தகத்திற்காக 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டியின் அடுத்த இலக்கு
அதோடு டிரெண்டும் பாசிடிவ் ஆக உள்ள நிலையில், நிஃப்டியில் இலக்கு, 12,300 - 12,400 ஆக நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர். கடந்த சில வர்த்தக தினங்களாகவே ஏற்றத்தில் உள்ள இந்திய சந்தைகள், இன்னும் ஏற்றத்திற்கு சாதகமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அதோடு 11,500 என்பது முக்கியமான சப்போர்ட் லெவல் என்பதால், இதனை உடைக்காமல் சந்தை தொடந்து மேலே சென்று கொண்டு இருப்பதும் ஒரு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

சற்றே ஆறுதல் தந்த ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சில தினங்களாக 74 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டு இருந்த நிலையில், இன்று 50 பைசா அதிகரித்து 73.88 ரூபாயாக வலுவடைந்துள்ளது. இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதோடு அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளும் அதிகரித்து வருவதையடுத்து, சந்தை ஏற்றத்தினையே கண்டு வருகிறது.

அன்னிய முதலீடு அதிகரிப்பு
இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், யார் ஜெயித்தாலும் விரையில் ஊக்கத்தொகை குறித்தான பேச்சு வார்த்தைகள் இருக்கலாம் என்பதால், சர்வதேச சந்தைகளும் சற்று ஏற்றத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் கடந்த அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று நிகர பயனர்களாக இருந்தனர். இவர்கள் 5,368.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்கு சந்தை தரவுகள் கூறுகின்றது. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

ஆசிய சந்தைகள் ஏற்றம்
அதோடு பேங்க் நிஃப்டி 1 சதவீத ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக ஹெச் டி எஃப்சி பங்குகள் 2% வரை ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு பல ஆசிய பங்கு சந்தைகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. இது அமெரிக்க தேர்தலில் ஜோ பிடனுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், ஏற்றத்திலேயே காணப்பட்டன.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
இதே நேற்று நடந்த ஃபெடரல் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு இறுதி வரையில் எந்த மாற்றமும் இல்லை என இவ்வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் கூறியுள்ளார். அதோடு அமெரிக்கா பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மற்றொரு மிகப்பெரிய பொருளாதார ஊக்குவிப்பு தொகை அவசியம் என்றும் கூறியிருந்தார்.