இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை மிகவும் நிலையற்ற வர்த்தகத்தை எதிர்கொண்டு வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 12 மணிக்குப் பதிவான உயர்வைத் தக்கவைக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சோமேட்டோ போன்ற முக்கிய பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்த காரணத்தால் அதிகப்படியான சரிவு பதிவாகி, முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். நேற்று வரை தொடர்ந்து உயர்வு பாதையில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி இன்று பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிரம்ப்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தனது அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்தது. இந்த வரி விதிப்பு இவ்விரு நாடுகள் உடனான அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கச் சந்தையில் துவங்கி இந்தியச் சந்தை வரையில் பங்குச்சந்தைகள் சரிய துவங்கியது. இதேவேளையில் அமெரிக்க அரசு பத்திரம் மீதான லாபமும் பெரிய அளவில் குறைந்து, டாலர் மதிப்பு சரிய துவங்கியுள்ளது.
இன்று மதியம் 12:27 மணியளவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 813 புள்ளிகள் குறைந்து 1.06% சரிவுடன் 76,260 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி50 கூட 211 புள்ளிகள் அல்லது 0.9% குறைந்து 23,134 ஆக இருந்தது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5.21 லட்சம் கோடி குறைந்து, மொத்த மதிப்பு ரூ.426.38 லட்சம் கோடியாகக் குறைந்தது.
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவங்கும் போது சிறிய அளவிலான உயர்வுடன் துவங்கினாலும், வெறும் 10 நிமிடத்தில் சரிவுக்கு தள்ளப்பட்டது, அடுத்த ஒரு மணிநேரத்தில் அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையில் 2.15 மணி அளவில் சென்செக்ஸ் 688 புள்ளிகள் சரிவுடன் 76,386.94 புள்ளிகள் அளவில் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 19 நிறுவனங்கள் சரிவில் உள்ளது. அல்ட்ராடெக் சிமெண்ட் மட்டுமே 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் உள்ளது, ஹெச்சிஎல், ஹிந்துஸ்தான் யூலீவர், ஐடிசி, நெஸ்லே, சன்பார்மா போன்றவை சிறிய அளவிலான உயர்வுடன் உள்ளது.
அண்டை நாடுகள் மீது வர்த்தகத் தடைகளை அமல்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு கையில் எடுத்துள்ளது உலகளாவிய சந்தை நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அமெரிக்க நிர்வாகம் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 25% கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கனடா மற்றும் மெக்சிகோ நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு அந்நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளும். இந்த பாதிப்பு கனடா, மெக்சிகோ நாடுகளை மட்டும் அல்லாமல் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதன் எதிரொலி தான் தற்போது இந்திய சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவுக்கு முக்கிய காரணம்.
இந்திய பங்குச்சந்தையில் சோமேட்டோ போன்ற நிறுவனங்களில் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் மந்தமான நிலை இருக்கும் காரணத்தாலும் இன்று பங்குச்சந்தை சரிவில் உள்ளது.


Click it and Unblock the Notifications