மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 600 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது வங்கி பங்குகளும், சாதகமாக இருக்கும் ஆசிய சந்தை வர்த்தகங்களும் தான்.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து மளமளவென உயர்ந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளைத் தாண்டி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, வெள்ளிக்கிழமை வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ் 618.6 புள்ளிகள் வரையில் உயர்ந்து 50,192.17 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் வங்கிப் பங்குகள்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இன்று நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள காரணத்தால் வங்கித்துறை பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்துச் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.
வங்கி பங்குகள் அதிக வளர்ச்சி
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் இன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பங்குகள் காலை வர்த்தகத்தில் 1.34 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதோடு இன்டஸ்இந்த் வங்கி 3.23 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.27 சதவீதமும், ஹெச்டிஎப்சி 2.24 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 1.92 சதவீதமும், கோட்டாக் வங்கி 1.86 சதவீதமும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதேபோல் நிஃப்டி குறியீடும் இன்று 168.90 புள்ளிகள் உயர்ந்து 15,074.95 புள்ளிகளைத் தொட்டுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டுக்கு வலிமை சேர்க்கும் விதமாக ஆசியச் சந்தை லாபகரமாகவும், ஆசியச் சந்தைக்குச் சாதகமாக அமெரிக்கச் சந்தை வர்த்தகமும் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications