இந்திய பங்குச்சந்தைக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் இது மிகவும் சாதகமான காலக்கட்டமாக விளங்குகிறது. குறிப்பாக கடந்த 3 மாதத்தில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் அனைத்தும் முதலீட்டு சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் வேளையில் சென்செக்ஸ், நிஃப்டி தினமும் புதிய உச்சத்தை தொடும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 71,084.08 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் இன்று காலை முதல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் இருக்க முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் பணவீக்கம் குறைந்ததை தொடர்ந்து நாணய கொள்கை இறுக்கத்தை தளர்த்துவதாக கிட்டத்தட்ட உறுதியளித்துள்ளது.
இதேபோல் பல கோடி முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தபடி 2024 ஆம் நிதியாண்டில் 3 முறை வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் சந்தை கணிப்பின் படி 4 முறை வட்டி விகிதம் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க பத்திர சந்சையில் இருந்து முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தையில் குவிய துவங்கியது.
இதற்கு ஏற்றார் போல் இந்திய ஜிடிபி வளர்ச்சி குறித்த அறிவிப்புகள், கச்சா எண்ணெய் விலை குறைவது, இந்தியாவின் உற்பத்தி மேம்பாடுகள் என அனைத்தும் இந்திய சந்தைக்கு சாதகமாக இருக்கும் காரணத்தால் அமெரிக்க முதலீடுகள் பெருமளவு இந்தியாவுக்கு வர துவங்கியுள்ளது.
அமெரிக்க முதலீட்டு சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் காரணமாக இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவன பங்குகளில் பணமழையாக கொடுக்கிறது. இதன் காரணமாக இன்று டாப் 30 நிறுவனங்களில் முதல் 5 இடத்தை பிடித்தது ஐடி சேவை நிறுவனங்கள் தான்.
ஹெச்சிஎல் 4.43 சதவீதமும், இன்போசிஸ் 4.01 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.96 சதவீதமும், டிசிஎஸ் 3.37 சதவீதமும், விப்ரோ 2.37 சதவீதம் உயர்ந்துள்ளது.
11.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 492.96 புள்ளிகள் உயர்ந்து 71,007.16 புள்ளிகளை எட்டியுள்ளது, சென்செக்ஸ் அதிகப்படியாக இன்று 71,084.08 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 138.25 புள்ளிகள் உயர்ந்து 21,320.95 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்படியாக 21,355.65 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications