பங்குச்சந்தையில் இன்று காலை முதல் தொடர்ந்து ஏறுமுகம் தான், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,619 புள்ளிகள் அதாவது 2.16% உயர்ந்து 76,693 என்ற புதிய உச்சத்தை தொட்டு முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடும் 469 புள்ளிகள் அதாவது 2.05% உயர்ந்து 23,290 என்ற புள்ளியில் நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 76,795.31 புள்ளிகள் உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. இதேபோல் 23,320.20 புள்ளிகள் உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது.

இன்று கவனிக்கும் படியாக ஜூன் 4ஆம் தேதி ஏற்பட்ட இழப்புகளை இரு குறியீடுகளும் முழுமையாக ஈடுகட்டி விட்டன.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு இன்று ரூ.7.38 லட்சம் கோடி உயர்ந்து ரூ.423.27 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த 3 நாட்களில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.423.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம், முதலீட்டாளர்களின் செல்வம் சுமார் ரூ.28 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி சென்செக்ஸ் வரலாறு காணாத விதமாக 6100 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழக்க மிக முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துத் தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் கொடுத்த ஆலோசனைகள் தான் என ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பியும், இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC - Joint Parliamentary Committee) விசாரணை கோரினார் ராகுல் காந்தி.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் அதே 6.5 சதவீதத்தை அறிவித்த பின்பு, 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.2 சதவீதம் வரையில் உயரும் என ஆர்பிஐ அறிவிப்பு முதலீட்டாளர் மத்தியில் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தை அடைய மோடி பெரும்பான்மை அடைய வேண்டும் என்பது இல்லை, பொருளாதாரம், வர்த்தகம் சிறப்பாக இருந்தாலே போதும் என்பதை தான் இன்றைய பங்குச்சந்தை காட்டுகிறது.
இந்த அதிசய உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண்பது, அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) கொள்கை முடிவுகள் சாதகமாக இருப்பது என பல காரணிகளும் இன்றைய உயர்வுக்கு காரணமாக உள்ளது.
மேலும் தேர்தலுக்கு பின்பு ஆர்பிஐ ஜிடிபி கணிப்புகள் மூலம் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலித்துள்ளது. இதோடு அடுத்த 5 வருடத்தில் சென்செக்ஸ் 100000 புள்ளிகளை தொடும் என பிரபல முதலீட்டாளர் மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications