மத்திய நிதியமைச்சர் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி உயர்வு குறித்த அறிவிப்புகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை உண்மையிலேயே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கதை மொத்தமாக மாறியது. இதற்கு முக்கியமாக அமெரிக்காவின் ஜிடிபி தரவுகளும், நுகர்வோர் செலவுகள் குறியீட்டின் தரவுகளும் தான். இவ்விரு தரவுகள் மூலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் முதல் 2024 இறுதிக்குள் 2 முறை குறைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக பட்ஜெட் கவலைகளைத் தாண்டி முதலீட்டாளர்கள் இன்று IT மற்றும் உலோக துறை சார்ந்த பங்குகளில் முதலீடு அதிகரித்ததால் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை 1200 புள்ளிகள் வரையில் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 6.92 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து 456.74 கோடி ரூபாயாக உயர்ந்தது.
மதியம் 1:14 மணி நிலவரப்படி, நிஃப்டி 50, 1.6% அதிகரித்து 24,818.25 என்ற இன்றைய உச்ச நிலையைத் தொட்டது. ஜூலை 19 அன்று நிஃப்டி குறியீடு 24,854 புள்ளிகளை எட்டியது. இதேபோல் , சென்செக்ஸ் 1.55% உயர்ந்து 81288.89 புள்ளிகளை அதிகப்படியாக எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் ஸ்டாராக ஜொலித்தது டெக் நிறுவன பங்குகள் தான், சுமார் 7% வரை உயர்ந்தன. அதில் முன்னணி நிறுவனங்களாக எம்ஃபேசிஸ், எல்டிஐ மைண்ட்ரீ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை இருந்தன. அமெரிக்கப் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்ததாக நேற்று வெளியான தரவுக்கு பின்னர் இந்த உயர்வு பதிவாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து பெரும்பாலான வருவாயை IT நிறுவனங்கள் பெறும் காரணத்தால், அமெரிக்க மத்திய வங்கி அறிவிக்கும் வட்டி விகித குறைப்பு பெரிய அளவில் பலன் அளிக்கும் என்பதைக் காட்டுகிறது.
இதற்கிடையில், நிஃப்டி மெட்டல் குறியீடு 3% உயர்ந்தது. அதில் அதானி என்டர்பிரைசஸ், வேதாந்தா மற்றும் டாடா ஸ்டீல் அகியவை அதிகளவிலான வளர்ச்சியை பதிவு செய்தன.
சென்செக்ஸ் குறியீட்டில் இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் TCS ஆகியவை 500 புள்ளிகள் உயர்வுக்குப் பங்களித்தன. கோட்டக் வங்கி, எல்&டி, ITC, SBI, HCL டெக் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்தது.
உலக சந்தைகளைப் பார்க்கும் போது, ஆசிய சந்தைகள் இன்று சரிவில் வர்த்தகமாகிறது, அதேபோல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் நெருக்கடியான நிலையைச் சந்தித்தன.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) நேற்றுடன் மூன்றாவது நாளாக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், இன்று பியூச்சர் சந்தையின் துவக்கம் வாயிலாக முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது. மத்திய பட்ஜெட்-க்கு பின்பு இந்திய பங்குச்சந்தையில் சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications