மும்பை பங்குச் சந்தை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் (TCS) ஜூன் காலாண்டு முடிவுகள் ஐடி துறைக்கு முதலீட்டாளர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. ஐடி துறையின் மீதான பங்கு முதலீட்டில் இன்று சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு இன்று 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 80893.51 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50, 290 புள்ளிகள் வரை உயர்ந்து 24,592.20 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

டிசிஎஸ் நேற்று வெளியிட்ட ஜூன் காலாண்டு முடிவுகளில், சந்தை வருவாய் எதிர்பார்ப்பைத் தாண்டியதைத் தொடர்ந்து TCS பங்குகள் இன்று 4 சதவீதம் உயர்ந்துள்ளன. இதோடு டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்.சி.எல். டெக் ஆகிய பங்குகளும் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
மேலும் ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எல்&டி, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ ஆகிய பங்குகளும் சிறப்பாக வர்த்தகமாகின்றன. மறுபுறம், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, என்டிபிசி, ஐடிசி ஆகிய பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் குறியீடு 0.75 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.4 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆயில் இந்தியாவின் டார்கெட் விலையை 663 ரூபாயாக உயர்த்தியுள்ளதன் காரணமாக ஆயில் இந்தியா பங்கு 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாகும் என மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு குறைந்துள்ளதால், அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகப்படியாகப் பங்குச்சந்தைக்கு இடமாற்றம் செய்ய வருகிறது.
வட்டி விகிதம் குறைந்தால் அமெரிக்க நிறுவனங்கள் டெக் சேவைகளுக்கு முதலீடு செய்ய குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும் என்பதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெற வாய்ப்புள்ளது. இதனால் ஐடி பங்குகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications