மும்பை: சென்செக்ஸ் தன் 37,500 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, மே 17, 2019-க்குப் பின் இதுவே முதல் முறை. கடந்த மே 20, 2019 முதல் ஜூலை 08, 2019 வரைக்குமான சென்செக்ஸ் டே சார்ட்டில், ஒரு டபுள் டாப் மற்றும் ட்ரிபிள் பாட்டம் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இந்த டபுள் டாப்பு புள்ளிகள் மாறுபட்டாலும், ட்ரிபிள் பாட்டம் புள்ளிகளில் இரண்டு புள்ளிகள் 38.700 புள்ளிகளில் வந்து அமர்கின்றன. எனவே 38,700 வலுவான ரெசிஸ்டென்ஸாக அமைகிறது.
டபுள் டாப்பிள் ஒரு டாப் 40,267 என்கிற வரலாற்று உச்சமாகவும், மற்றொரு டாப் 39,990 என்கிற புள்ளியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான வித்தியாசம் 277 புள்ளிகளாக இருக்கின்றன. கடந்த ஜூலை 08, 2019-க்குப் பிறகு சந்தை கொஞ்சம் இழுத்துப் பிடித்து வர்த்தகமானாலும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. ஜூலை 17, 2019 அன்று சென்செக்ஸ் 39,200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தது, அதற்கு மேல் சென்செக்ஸால் மேலே செல்ல முடியவில்லை.

மே 17, 2019 அடுத்த இரண்டே வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் தன் ஜூலை 08, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்த 38,700 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே சரிந்து விட்டது. ஆக 38,700 என்கிற வலுவான சப்போர்ட் உடைந்திருப்பதால், சரிவு உறுதியாகி இருக்கிறது. இந்த சரிவைக் கணக்கில் மேலே சொன்ன இரண்டாவது டாப் புள்ளியான 39,990 புள்ளிகளில் இருந்து 38,700 என்கிற வலுவான சப்போர்ட்டைக் கழித்தால் 1,290 புள்ளிகள் வருகின்றன. ஆக 37,410 தான் நமக்கு அடுத்த வலுவான சப்போர்ட்டாக இருக்கும் என சார்ட் சொல்கிறது. அதோடு 37,410 உடைபடும் பட்சத்தில் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகள் செயல்படும் என எதிர்பார்க்கலாம் எனச் சொல்லி இருந்தோம்.
நாம் நேற்று கணித்த படியே சென்செக்ஸ் தன் 37,410 சப்போர்ட்டை ஒட்டி 37.397 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இந்த இறக்கம் நாளையும் தொடருமானால் 37,000 புள்ளிகள் தான் அடுத்த வலுவான சப்போர்ட்டாக நிற்கும். ஒருவேளை 37,000 உடைக்கப்படாமல் நேரடியாக 36,500 தான் அடுத்த சப்போர்ட்டாக இருக்கும் என்கிறது சென்செக்ஸ் டே சார்ட்.
இப்போது வரை சந்தையை மேலே ஏற்றும் நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு ஜூன் 2019 காலாண்டு முடிவுகள் வேறு அத்தனை சிறப்பாக இல்லை. இதுவரை வெளியான காலாண்டு முடிவுகளில் 34% கம்பெனிகள் தான் ஓரளவுக்கு நல்ல முடிவுகளைச் சொல்லி இருக்கின்றன. 39% கம்பெனிகள் நட்டக் கணக்கு தான் வாசித்திருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல் ஏதோ காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். எனவே எந்த செய்தி வந்து சந்தையின் இறக்கத்தை தடுக்கும் எனத் தெரியவில்லை.
இன்று காலை சென்செக்ஸ் 37,735 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,397 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 289 புள்ளிகள் கூடுதல் இறக்கம். அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,213 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,085 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 103 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 40 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,623 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 534 பங்குகள் ஏற்றத்திலும், 1,982 பங்குகள் இறக்கத்திலும், 107 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,623 பங்குகளில் 23 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 656 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி துறை மட்டுமே கொஞ்சம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார் பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மீடியா, மெட்டல், பொதுத் துறை வங்கிகள் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், ஐடிசி, ஹெச் யூ எல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இந்தியாபுல்ச் ஹவுசிங், ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications