நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்தார், இந்த ஆண்டு தனிநபர் வருமான வரி சலுகை, சுகாதாரத் துறை, பீகார் மாநிலம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான அறிவிப்புகளை வெளியிட்ட வேளையில் பட்ஜெட் நாளில் சிறிய அளவிலான உயர்வுடன் சென்செக்ஸ் முடிந்தது. ஆனால் பட்ஜெட்-க்கு பின்பு திங்கட்கிழமை காலையில் வர்த்தகம் துவங்கிய போது பெரும் சரிவைக் கண்டது.
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே கடும் வீழ்ச்சியுடன் துவங்கியது. சென்செக்ஸ் 77,000 புள்ளிகளுக்குக் கீழே வீழ்ந்தது. நிஃப்டி 50 குறியீடு 23,250 புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் நடைபெற்றது.

காலை 9:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் குறியீடு 663 புள்ளிகள் குறைந்து, அல்லது 0.86% வீழ்ச்சி அடைந்து 76,843.16 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.இதேபோல், நிஃப்டி 50 குறியீடு 216 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,266.05 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.
மும்பை பங்குச்சந்தை வரலாற்று ரீதியாக பட்ஜெட் தினத்தன்று மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்யும் நிலையைக் கொண்டு இருந்தாலும், சனிக்கிழமை வர்த்தகத்தில் சிறப்பான முடிவைக் கண்டது. இதற்கு முக்கியமான காரணம் சனிக்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கீடு சனிக்கிழமை இல்லாதது தான்.
ஆனால் திங்கட்கிழமை பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் காரணத்தால் பட்ஜெட்டின் சாயம் வெளுத்தது போல் இன்று பெரும் சரிவுடன் மும்பை பங்குச்சந்தை சரிந்துள்ளது.
கடந்த வாரம் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை மீண்டும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதேவேளையில் அமெரிக்க அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரிகளை விதித்ததையடுத்து, அமெரிக்கச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தன.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை வர்த்தகப் போரின் துவக்கம் என அச்சுறுத்தலை முதலீட்டுச் சந்தைக்கு அளிக்கிறது. இது அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா வர்த்தகத்தையும், முதலீட்டையும் பாதிக்காமல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் இந்தியச் சந்தையும் இதன் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரி விதிப்பால் அமெரிக்க டாலர் மதிப்பு வலிமை பெற்றுள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை அமெரிக்காவிற்கு பெரும் எண்ணெய் வழங்கும் நாடுகள் என்பதால், எண்ணெய் விலையும் திங்கட்கிழமை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications