இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தனது நாணய கொள்கை கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதங்களை மாற்றாமல் அறிவித்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்கும் என இந்திய முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.
இதற்கு முக்கியமான ஆதாரமாக ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகளை அறிவித்த உடனேயே நிஃப்டி குறியீடு வரலாற்றில் முதல் முறையாக 21000 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இன்றைய வர்த்தக முடிவிலும் மும்பை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 303.91 புள்ளிகள் உயர்வுடன் 69,825.60 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீடு 68.25 புள்ளிகள் உயர்வுடன் 20,949.40 புள்ளிகளை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்படியாக 69,893.80 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 21,006.10 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை விடச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். இதேவேளையில் நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த அதிகப்படியான முக்கியத்துவத்தைக் கொடுக்கப்படும் எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தற்போதும் இந்தியச் சந்தை மிகவும் முக்கியமான சந்தையாக மாறியுள்ளது. ஆர்பிஐ முடிவுகளுக்குப் பின்பு இந்திய சந்தையை நோக்கி படையெடுக்கும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
ஆனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் அனைத்தும் தற்போது அடுத்த வார அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் கொள்கை கூட்டத்தின் முடிவுகள், அந்நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை தரவுகள், குறிப்பாக விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகளை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர்.
இந்தியாவின் மியூச்சவல் பண்ட் அமைப்பின் தரவுகள் படி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர்கள் 15,514.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். அக்டோபர் மாதம் 19,932 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சந்தையின் கீழ் மொத்த சொத்துக்கள் மதிப்பு நவம்பர் மாதம் 49.04 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது அக்டோபர் மாதம் 46.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications