அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகித உயர்வு குறித்து வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாதது, ஐரோப்பிய பொருளாதாரத்தின் மந்த நிலை, ரஷ்யா - உக்ரைன் - உள்நாட்டு கிளர்ச்சி ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு முதலீட்டை நகர்த்தி வருகின்றனர்.
சர்வதேச வர்த்தக சந்தையில் தற்போது வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்க கூடிய முக்கியமான சந்தைகளில் இந்தியா டாப்பில் இருக்கும் காரணத்தால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த முதலீடுகள் வாயிலாக இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64037.1 என்ற புதிய வரலாற்று உச்ச அளவை எட்டியுள்ளது. ஆனாலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐடி நிறுவனங்களான விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகியவை சரிவுடன் உள்ளது.
இதேவேளையில் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 19,003.20 புள்ளிகளை முதல் முறையாக தொட்டு அசத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அனைத்து நிஃப்டி துறை சார்ந்த குறியீடுகளும் உயர்வுடன் காணப்படும் வேளையில் நிஃப்டி மீடியா மட்டும் கணிசமான சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் பிளாக் டீல் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வரலாற்று உச்சத்தை தொட முக்கிய காரணமாக இருக்கிறது. சென்செக்ஸ் குறியீடு ஏற்கனவே கடந்த வாரம் வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று மிட்கேப் குறியீடு புதிய உச்சத்தையும், ஸ்மால்கேப் குறியீடு 52 வார உச்சத்தையும் தொட்டு உள்ளது.
HDFC மற்றும் HDFC வங்கி ஜூலை 1 அன்று கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட இணைப்பை முடிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளதால் வங்கி பங்குகளும் இன்று அதிகப்படியான முதலீட்டை பெற்றுள்ளது. இன்று இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications