இந்திய பங்குச்சந்தை கடந்த 2 நாள் வர்த்தக சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று கணிசமான உயர்வை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை கொடுத்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஜியோ பைனான்சியல் பங்குகள் பட்டியலிடுவது குறித்த எதிர்பார்ப்புகள் பெரிய அளவிலான ஊந்து சக்தியாக இருந்தது, ஆனால் ஜியோ பைனான்சியல் பங்குகள் முதல் நாளில் 5 சதவீத அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டி அடுத்த சில நிமிடத்தில் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது.

வர்த்தக முடிவிலும் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு அதாவது 5 சதவீதம் சரிவடைந்து 251.75 ரூபாய் விலையை எட்டியுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 267.43 புள்ளிகள் உயர்ந்து 65,216.09 புள்ளிகளை எட்டியுள்ளது, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 96 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 267 புள்ளிகள் உயர்வுடன், அதிகப்படியாக 387 புள்ளிகள் உயர்வையும் பதிவு செய்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 83.45 புள்ளிகள் உயர்ந்து 19,393.60 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அல்ட்ராடெக், ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பின் ஆகியவை சரிவுடன் முடிந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தை உயர்வுக்கு உதவியாக இருந்தது பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை தலா 1 சதவீத உயர்வுடன் துவங்கியது தான்.
மேலும் இன்று சீன நாட்டின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நாட்டின் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.55 சதவீதத்தில் இருந்து 3.45 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் 5 வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 4.2 சதவீதமாக குறைத்துள்ளது. இது ஜூன் மாத குறைப்பிற்கு பின்பு பதிவான வரலாற்று சரிவாகும்.
சீனாவின் வட்டி விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து நிலவும் உயர்வு ஆகியவை ஐரோப்பிய பத்திர சந்தையில் இருந்த முதலீட்டை பங்குச்சந்தைக்கு ஈர்த்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் மிட்கேப் குறியீடு 0.87 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.71 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் சுமார் 200 நிறுவன பங்குகள் இன்று 52 வார உயர்வை எட்டியுள்ளது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 303.4 கோடி ரூபாயில் இருந்து 306.9 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன மதிப்பீட்டை பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications