புத்தாண்டின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் மந்தமான வர்த்தகத்தைப் பெற்றுவந்த நிலையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் முக்கியமான துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக 2.45 மணியளவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மளமளவென 250 புள்ளிகள் வரையில் சரிந்தது.
உலகச் சந்தைகள் விடுமுறை
இன்று உலக நாடுகளில் புத்தாண்டு காரணமாகப் பங்குச்சந்தைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகப் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் இன்று முழுமையாகக் குறைந்தது.
வருடத்தின் முதல் நாளான இன்று சீனா, ஹாங்காங், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, ஜெர்மனி ஆகிய அனைத்து முன்னணி பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் துறைகள்
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோ, டெக், மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
4 துறைகள் அதிகளவில் சரிவு
இன்றைய வர்த்தக முடிவில் வங்கித்துறை குறியீடு 0.84 சதவீதமும், ஆட்டோமொபைல் குறியீடு 0.73 சதவீதமும், டெக் துறை குறியீடு 0.57 சதவீதமும், ஐடி துறை 0.55 சதவீதம் வரையில் சரிந்து காணப்படுகிறது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 244.08 புள்ளிகள் சரிந்து தனது புதிய உயர்வான 34,000 புள்ளிகளில் இருந்து கீழ் இறங்கி, 33,812.75 புள்ளிகளை அடைந்துள்ளது.
மதியம் வரையில் மந்தமான வர்த்தகத்தை மும்பை பங்குச்சந்தை பதிவு செய்தாலும், 2.40 மணி வரையில் தொடர்ந்து உயர்வான நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் அதன்பின் மளமளவென 250 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், நிஃப்டி குறியீடு 95.15 புள்ளிகள் சரிந்து 10,435.55 புள்ளிகள் வரையில் சரிவை அடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் இன்டஸ்இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications