இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் தாறுமாறு தக்காளி சோறு என்பது போல் 100ல் 95 பேருக்கு கட்டாயம் லாபகரமாக அமைந்திருக்கும், அதிலும் முக்கியமாக 100ல் 3 பேருக்கு கட்டாயம் 15 முதல் 20 சதவீதம் லாபம் கிடைத்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 803 புள்ளிகள் உயர்ந்து 64,718.56 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதற்கு மத்தியில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 64768.58 புள்ளிகளை எட்டி இன்று வரலாற்று உச்சத்தை தொட்டு அசத்தியுள்ளது.

இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 216.95 புள்ளிகள் உயர்ந்து 19,189.05 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 19,201.70 புள்ளிகள் வரையில் உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு 1748.56 உயர்ந்துள்ளது, இதில் பக்ரீத் விடுமுறை காரணமாக ஒரு நாள் விடுமுறை.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அதிகப்படியாக 4.14 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதில் வியக்கும் வண்ணமாக பல நாட்களாக தடுமாறி வந்த ஐடி பங்குகள் இன்று அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது, இன்போசிஸ் பங்குகள் மட்டுமே 3.21 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி மட்டுமே சரிவுடன் காணப்பட்டது. இதேபோல் நிஃப்டி குறியீடு மெட்டல் துறை குறியீடு மட்டும் 0.03 சதவீத சரிவை பதிவு செய்தது. பொதுத்துறை வங்கிகள் குறியீடு 2.06 சதவீதம், ஐடி 2.50 சதவீதம், ஆட்டோமொபைல் 2.07 சதவீதம் வரையில் உயர்ந்தது.
அமெரிக்காவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் உயர்வுடன் காணப்படுகிறது, வேலையில்லாதோர் எண்ணிக்கையில் சரிவு, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் நெருக்கடியில் தளர்வு ஆகியவை அந்நாட்டு பொருளாதாரம் ரெசிஷன் அச்சம் கணிசமாக குறைந்துள்ளது இதனால் அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை உயர்வால் ஐரோப்பிய பங்குச்சந்தையும் உயர்ந்துள்ள காரணத்தால் இந்திய பங்குச்சந்தையும் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications