அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மார்ச் 2024 க்குள் முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும், 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3 முறை வட்டி விகிதத்தை குறைக்கும் என அறிவிப்பு வெளியானதில் இருந்து சர்வதேச பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று காலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 71000 புள்ளிகளை தொட்டது. ஆனால் இந்திய பங்குச்சந்தையில் குவியும் முதலீடுகள் இதோடு நிற்கவில்லை.

மதிய வர்த்தகத்தில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச சந்தை தாக்கத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கலை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்றை வர்த்தகம் வங்கி, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளால் அதிகளவிலான உயர்வை தொட்டு உள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1000 புள்ளிகள் உயர்ந்தது மாலை வர்த்தகத்தில் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
இதன் மூலம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.2.76 லட்சம் கோடி உயர்ந்து ரூ.357.78 லட்சம் கோடி அளவீட்டை தொட்டது. இதேபோல் இந்த வாரம் மட்டும் மொத்த சந்தை மூலதனத்தில் ரூ.8.55 லட்சம் கோடியும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 969.55 புள்ளிகள் உயர்ந்து 71,483.75 புள்ளிகளை எட்டியுள்ளது, இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக இன்று 71,605.76 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 273.95 புள்ளிகள் உயர்ந்து 21,456.65 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்படியாக 21,492.30 புள்ளிகளை தொட்டது.


Click it and Unblock the Notifications