1989ல் தொடங்கப்பட்ட நிறுவனம் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனம் மைக்ரோ கிரிஸ்டலின் செல்லுலோஸ் (எம்சிசி) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மருந்து, உணவு, ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் அழகுசாதன துறை மருந்துகளில் ஒரு துணை பொருளாக எம்சிசி பயன்படுத்தப்படுகிறது.
2021 நவம்பரில் தான் இந்நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் களமிறங்கியது. அப்போது இந்நிறுவனம் ஒரு பங்கின் விலை ரூ.163 என்ற விலையில் 76.95 லட்சம் பங்குகளை வெளியீட்டு ரூ.125.43 கோடி திரட்டியது. அந்த மாதம் 15ம் தேதி இந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் வலுவான வர்த்தகம் மற்றும் நிதி நிலை முடிவை கொண்டுள்ளதால் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்ததகம் முடிவடைந்தபிறகு வெளியிட்டது. நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்தது.
2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.16.11 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 64.05 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த அடிப்படையிலான செயல்பாட்டு வாயிலான வருவாய் 61.47 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.110.95 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தால், கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஒரே நாளில் இப்பங்கின் விலை 17.35 சதவீதம் அதிகரித்து புதிய 52 வார உச்சமான ரூ.86.69ஐ எட்டியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.73.87ல் முடிவுற்றது. இந்நிறுவன பங்கின் விலை வர்த்தகத்தின் முடிவில் ரூ.81.55ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,507.05 கோடியாக உள்ளது.
இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாதத்தில் இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.22ஐ எட்டியது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு விலை 295 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலை 65 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 175 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 150 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications