இந்திய பங்குச் சந்தைகள் சமீபகாலமாக ஏறுமுகத்தில் உள்ளன. கடந்த சில தினங்களாக பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் பங்குச் சந்தை பிரபலங்கள் விவேகமான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அனுபவம் வாய்ந்த ஸ்மால்கேப் பங்கு தேர்வாளர் ஆஷிஷ் ராம் சந்திர கச்சோலியா அண்மையில் வாங்கிய ஒரு ஸ்மால்கேப் நிறுவன பங்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆஷிஷ் ராம் சந்திர கச்சோலியாவின முதலீட்டு நிறுவனமான ஹிமாலயா பைனான்ஸ் அண்ட் இன்ஸ்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சமீபத்தில், டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 1,80,000 பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.2,210 என்ற விலையில் வாங்கியது. இதனால் அனைவரது பார்வையும் டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் மீது விழுந்துள்ளது.

அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கூட்டு வர்த்தக நிறுவனம் டான்பாக் இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனம் ஹைட்ரோபுளோரிக் அமிலம் மற்றும் அதன் வழிதோன்றல்களின் உற்பத்திக்காக பெயர் பெற்றது. 1985 முதல் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் அன்ஹைட்ரோபுளோரிக் அமிலம் மற்றும் அலுமினியம் புளோரைடு ஆகியவற்றின் மிகப்பெரிய இந்திய உற்பத்தியாளர்களில் ஒன்று. மேலும் சர்வதேச அளவில் ரசாயன உற்பத்தியில் 6வது பெரிய உற்பத்தியாளராகவும், 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்நிறுவனம் உள்ளது.
டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் நிதி நிலவரம் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் உபரி பணத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.374.95 கோடியும், நிகர லாபமாக ரூ.56.13 கோடியும் ஈட்டியுள்ளது.
ஸ்மால்கேப் பங்கான டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் ஒரு மல்டிபேக்கர் பங்காக உள்ளது. கடந்த ஒராண்டில் மட்டும் இந்நிறுவன பங்கின் விலை 150 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார கால புதிய உச்சமான ரூ.2,778.70ஐ எட்டியது. 2022 டிசம்பர் 26ம் தேதியன்று இப்பங்கு விலை ரூ.810ஆக இருந்தது.
குளிர்சாதன சாதனங்கள், துருப்பிடிக்காத ஸ்டீல், சோலார் செல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மருந்து மற்றும் விவசாய பொருட்கள் போன்ற பல்வேறு தொழில்களில் ஹைட்ரோபுளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த ரசாயனத்துக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது இந்நிறுவனம் தனது ஹைட்ரோபுளோரிக் அமிலம் உற்பத்தி திறனை அதிகரிக்க விவேகமான திட்டமிடலை செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனத்துக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. எனவே இந்நிறுவன பங்கும் நல்ல ஆதாயம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications