இந்திய பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. நிஃப்டி 50 குறியீடு அதன் 52 வார உச்ச அளவான 26,277-லிருந்து 10% குறைந்துள்ளது. இதேபோல் சென்செக்ஸ் குறியீடு அதன் வரலாற்று உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 8,300 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தை இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கரடியின் பிடிக்குள் செல்லவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. பொதுவாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதன் உச்சத்தில் இருந்து 20 சதவீதம் குறைந்தால் மட்டுமே Bear grip-க்குள் சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போதைய சரிவு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சந்தை மூலதனம் கொண்ட 900-க்கும் அதிகமான பங்குகள் தங்கள் 52 வார உச்சத்திலிருந்து குறைந்தபட்சம் 20% குறைந்துள்ளது. இதன் மூலம் கணிசமான பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்திய பங்குச்சந்தை இந்த வருடம் துவக்கத்தில் இருந்து முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பங்குச்சந்தை சரிய தொடங்கியது. இந்த வீழ்ச்சி பல காரணங்களால் ஏற்பட்டு இருந்தாலும், 2 முக்கிய காரணங்களுக்கு அதிகப்படியான பங்கீடு வகிக்கிறது.
சீன அரசு பொருளாதார ஊக்குவிப்பிற்காக 148 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்த நிலையில், உலக நாடுகளில் இருக்கும் முதலீடுகள் சீனாவுக்கு செல்ல துவங்கியது. இதேபோல் அமெரிக்க அரசியல் மாற்றமும் முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.
இதோடு இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. மேலும், பலவீனமான நிறுவன லாபங்கள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு நிதியின் வெளியேற்றம் ஆகியவை சென்செக்ஸ், நிஃப்டி சரிவுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) இந்திய பங்குச்சந்தை மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து தொடர்ந்து முதலீடு செய்து வந்ததாகவும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) குறிப்பாக அக்டோபர் மாதத்திலிருந்து கணிசமான முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றி சீன பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.1.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை வெளியேற்றம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications