மும்பை பங்குச்சந்தை பற்றி எரிந்துகொண்டு இருக்கும் வேளையில் ஒரு பங்கு மட்டும் அதிரடியாக உயர்ந்து வந்தது எத்தனை பேர் கவனித்தீர்கள். இந்தியப் பங்குச்சந்தையை பொருத்த வரையில் எப்போதும் பாதுகாப்பான துறையாக கருதப்படுவது FMCG தான்.
மோசமான காலகட்டத்தில் எப்படி தங்கம், முதலீட்டாளர்களைக் காப்பாற்றுமோ, அதேபோல் பல தருணத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை நுகர்வோர் பொருள் துறை நிறுவனங்கள் காப்பாற்றியுள்ளது. அதன் அடிப்படையில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) பங்குகள் கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 16% உயர்ந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் பங்குச்சந்தை நேற்று 6000 புள்ளிகள் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான பங்குகளுக்கு அதிகம் நாடிய நிலையில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் பங்குகளில் அதிகம் முதலீடு செய்தனர். இந்தியா உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை என்பதால் பொருளாதாரம், வர்த்தகம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், சில துறைகள் பங்குச்சந்தையைத் தாங்கி நிற்கும் அதில் ஒன்று தான் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்.
இதேபோல் நேற்றைய ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் பங்குகள் உயர்வுக்கு ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டை உயர்த்தியதும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
எதிர்பாராத தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் புதிய அரசு நாட்டின் நுகர்வை அதிகரிக்கும் பாலிசிகளை தான் முதலில் அறிவிக்கும், குறிப்பாகக் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் கீழ்த்தட்டு மக்கள் மத்தியில் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையிலான சாதகமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது.
இதன் மூலம் சில நிறுவனங்கள் கிராமப்புற நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிய காரணத்தால் FMCG துறையில் கில்லியாக இருக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் நேற்றைய ரத்தகளறியில் வைரமாக ஜொலித்தது.
புதன்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் நுகர்பொருள் துறை குறியீடு (FMCG index) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, இதில் ஹெச்யுஎல் பங்குகள் முன்னிலை வகித்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் காரணமாகக் கடந்த சில நாட்களில் பங்குச்சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இருப்பினும், இந்த நிலையற்ற தருணங்களில், நுகர்பொருள் துறை பங்குகள் ஒப்பீட்டளவில் வலுவாக உள்ளன என்று 5paisa.com இன் ஆராய்ச்சித் தலைவர் ருசித் ஜெயின் கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் ஹெச்யுஎல், பிரிட்டானியா மற்றும் டாபர் போன்ற பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறுகிய கால நோக்கில் இந்த துறையில் ஹெச்யுஎல் பங்குகளை வாங்குவதை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் பரிசீலிக்கலாம் என்று 5paisa.com இன் ஆராய்ச்சித் தலைவர் ருசித் ஜெயின் கருத்து தெரிவித்தார்.
கடந்த 2 நாள் வர்த்தகத்தில் ஹெச்யுஎல் உடன், டாபர் இந்தியா, Emami, Marico, Britannia Industries மற்றும் Godrej Consumer Products உள்ளிட்ட பிற நிறுவனங்களின் பங்குகளும் 15% வரை உயர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications