இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 980 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து 77,690 புள்ளிகளில் நிறைவுற்றது. அதேபோல், நிஃப்டி 1.36% சரிந்து 23,559 புள்ளிகளில் நிறைவுற்றது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 77,533.30 புள்ளிகளுக்கும், நிஃப்டி குறியீடும் 23,509.60 புள்ளிகளையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கடுமையான வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் பணவீக்கமாகும், கடந்த மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 14 மாத சரிவை எட்டியுள்ளது. இதனால் அடுத்த மாதம் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. மேலும், 2ஆம் காலாண்டில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பலவீனமான லாபங்கள் மற்றும் தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவை பங்குச்சந்தையை இன்று கடுமையாகப் பாதித்துள்ளது.

இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 6.8 லட்சம் கோடி இழந்து 430.45 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தக சரிவுக்கு பெரும் பங்கு வகித்த நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, எல் & டி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. இதை தொடர்ந்து. எஸ்பிஐ, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டாக் வங்கி ஆகியவையும் சரிவைச் சந்தித்தது.
துறை ரீதியாக பார்க்கும் போது நிஃப்டி வங்கி, ஆட்டோ, மீடியா, மெட்டல், PSU வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் 2% முதல் 3.2% வரை குறைந்துள்ளன. சந்தை நிலைத்தன்மையின் அளவீடான இந்திய VIX 5% உயர்ந்து 15.33 ஆக உள்ளது.
இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே லாபகரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications