2024-25ம் நிதியாண்டு நாளையுடன் விடைபெறுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச் 31ம் தேதி) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் மட்டுமல்ல கரன்சி டெரிவேடிவ்ஸ் பிரிவும் நாளை செயல்படாது. அதேசமயம், எம்சிஎக்ஸ்க்கு காலையில் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி முதல் வழக்கம் போல் இரவு 11.30 மணி வரை எம்சிஎக்ஸில் நடைபெறும். நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 4 தினங்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறும்.
இருப்பினும் சில முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை மார்ச் 31 திங்கட்கிழமை அல்லது ஏப்ரல் 1 அன்று விடுமுறை விடப்படுமா என்ற குழப்பம் இருந்ததாக தெரிகிறது. ஏனென்றால் நம் நாட்டில் பிறை தெரிவதை பொறுத்தே ரம்ஜான் கொண்டாடப்படும் என்பதால், ரம்ஜான் நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்படும்.

இருப்பினும்,முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் இதை பற்றி குழப்பம் அடையக்கூடாது. ஏனெனில் நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவை நடப்பு காலண்டர் ஆண்டுக்கான விடுமுறை தின அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
2025ல் இந்திய பங்குச் சந்தைகளுக்கு மொத்தம் 14 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகாசிவராத்திரி (பிப்ரவரி 26) மற்றும் ஹோலி (மார்ச் 14) ஆகியவற்றுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகள் இயங்காது. எஞ்சியுள்ள விடுமுறை தினங்கள் இதோ:
ஏப்ரல் 10 ஸ்ரீ மாகாவீா் ஜெயந்தி
ஏப்ரல் 14 டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18 புனித வெள்ளி
மே 1 மகாராஷ்டிரா தினம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (79வது சுதந்திர தினம்)
ஆகஸ்ட் 27 ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி
அக்டோபர் 2 மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 தீபாவளி
அக்டோபர் 22 தீபாவளி பாலிபிரததிபதா
நவம்பர் 5 பிரகாஷ் குர்புர்ப் ஸ்ரீ குருநானக் தேவ் ஜெயந்தி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்
இந்த நிதியாண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,978.25 புள்ளிகளை எட்டியது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 26,277.35 புள்ளிகளை தொட்டது. அதன் பிறகு பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தபோதிலும், ஒட்டு மொத்த அளவில் 2024-25ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதமும், நிஃப்டி 5.3 சதவீதமும் வளர்ச்சி கண்டன.


Click it and Unblock the Notifications