ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பிரதமர் மோடியுடன் தொடர்பு படுத்தி அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு என அதானி குழும பங்குகள் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளன. இருந்த போதிலும் அதானி குழுமத்தின் ஒரு நிறுவன பங்கு தற்போது மல்டி பேக்கர் பங்காக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொட்டி தந்துள்ளது.
அதானி பவர் நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 670% லாபத்தை பெற்று தந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி பங்குச்சந்தையில் ரூ.91.95 என வர்த்தகமான அதானி பவரின் தற்போதைய பங்கு மதிப்பு ரூ.726 ஆகும்.

கடந்த ஓராண்டு காலத்தில் அதானி பவரின் ஒரு பங்கு மதிப்பு 185 %, 5 ஆண்டுகளில் 1315 % லாபம் பெற்று தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2.74 லட்சம் கோடிகளாக உயர்வு கண்டுள்ளது.
அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் அதானி பவர் அதிகம் வாங்கப்பட்ட பிரிவிலும் இல்லை, அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரிவிலும் இல்லை . இதன் ஆர்எஸ்ஐ எனப்படும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் (RSI -relative strength index) என்பது 67.1 என்ற நிலையில் இருக்கிறது.
இதனிடையே ஸ்டாக் பாக்ஸ் என்ற தரகு நிறுவனம் அதானி பவர் பங்குகளை வாங்கலாம் என்றும் இதன் ஒரு பங்கின் மதிப்பு 790 ரூபாய் வரை செல்ல கூடும் என்றும் தெரிவித்துள்ளது . அதேவேளையில் புரோகிரஸிவ் ஷேர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான ஆதித்யா , அதானி பவர் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கும் என்றும் 800 ரூபாய் வரை இதன் மதிப்பு செல்லலாம் என்றும் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது மின்சார தேவை அதிகரித்திருப்பது மற்றும் அதானி பவர் அதன் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவது என்பன உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த பங்கின் மதிப்பு உயரும் என ஷாம்கோ செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.
அதானி பவர் குழுமத்தின் பங்குகளை பொறுத்தவரை புக் வேல்யூ 111.86, ஃபேஸ் வேல்யூ 10 என இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிதி அளவீடுகளை பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டு அதானி பவரின் வருமானம் 43,041 கோடி ஆகும்.
அதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் லாபம் 10,727 கோடி ரூபாயாக இருக்கிறது . அதானி பவரில் சுமார் 71% பங்குகள் புரமோட்டர்களிடமே இருக்கிறது. 15 % வெளிநாட்டு நிறுவனங்களிடமும், சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 10% பங்குகளும் இருக்கின்றன. அதானி பவர் நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு ரூ.231 , 52 வார கால உச்சபட்ச மதிப்பு ரூ.797 ரூபாய் ஆகும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications