வங்கி டெபாசிட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வதை காட்டிலும் பங்குகளில் முதலீடு செய்வதை பலரும் விரும்புகின்றனர். ஏனென்றால் அவற்றை காட்டிலும் பங்குகளில் குறுகிய காலத்தில் நல்ல ஆதாயம் பெறலாம் என்ற எண்ணம் தான். அதற்கு ஏற்றார்போல் பல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் செல்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது. அப்படி ஒரு மல்டி பேக்கர் பங்குதான் டைகர் லாஜிஸ்டிக்ஸ். மூன்றே ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,400 சதவீதத்துக்கு ஆதாயம் கொடுத்துள்ளது.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச சந்தையில் (வெளிநாட்டு இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள்) கவனம் செலுத்தும் நோக்கில், FreightJar-ன் பீட்டா பதிப்பை (டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ் தளம்) வெளியிடுவற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது.

டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை நிலவரமும் சிறப்பாக உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.433.35 கோடியும், நிகர லாபமாக ரூ.23.21 கோடியும் ஈட்டியுள்ளது. பங்குச் சந்தையில் தற்போது இப்பங்கு 5,20,50,100 மற்றும் 200 நாட்கள் மூவிங் சராசரியை காட்டிலும் அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்தது. இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்கின் விலை ஏற்றம் காண தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.656ஆக உயர்ந்தது. இருப்பினும், நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.595.65ல் நிறைவடைந்தது. டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை கடந்த 3 மாதத்தில் 44 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 72 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு 338 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 1,474 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.595.65ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications