நாட்டின் முன்னணி சங்கிலி தொடர் தங்க நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்று கல்யாண் ஜூவல்லர்ஸ். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நகை நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது, செயல்திறன் நன்றாக இருப்பது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருந்தது. இம்மாதம் 2ம் தேதி மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு விலை புதிய உச்சமான ரூ.794.60ஐ எட்டியது.
ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகளை வாங்க பண்ட் மேனேஜர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் வெளியானது. மேலும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து இந்நிறுவன பங்கின் விலை மளமளவென சரிந்தது. அதேவேளையில், இந்த குற்றச்சாட்டுக்களை கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது.

கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாண ராமன் கூறுகையில், இது மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு. நாங்கள் எப்போதும் எங்கள் வணிகங்களையும் அனைத்து பங்குதாரர்களுடான தொடர்புகளையும் மிக உயர்ந்த நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்தமான எந்த வளாகத்திலும் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. அது வெறும் வதந்தி. எங்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சரக்கு பல நிலை தணிக்கு உட்படுகிறது.
கடந்த 18 மாதங்களில் சுமார் ரூ.450 கோடி கடனை திருப்பி செலுத்தியுள்ளோம். மேலும் டிவிடெண்டாக ரூ.170 கோடி வழங்கியுள்ளோம். இம்மாதம் 30ம் தேதியன்று நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிறுவனத்தின் மறுப்பை அடுத்து கடந்த 20ம் தேதியன்று இந்நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது.
ஆனால் அதற்கு நேற்று வரையிலான இரண்டு நாளிலும் இப்பங்கின் விலை சரிவு கண்டது. இந்நிலையில், இன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 4.79 சதவீதம் உயர்ந்து ரூ.509.30ஐ எட்டியது. இது சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இந்த விலை உயர்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வர்த்தகத்தின் முடிவில் தொடர்ந்து 3வது நாளாக பங்கின் விலை சரிவை சந்தித்தது. பங்கு வர்த்தகத்தின் முடிவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.59 சதவீதம் குறைந்து ரூ.478.25ல் முடிவுற்றது.
தற்போது கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலை குறைவாக இருப்பதால் அதை வாங்கலாமா என்ற கேள்விக்கு நான்கு ஆய்வாளர்கள் இந்த பங்கை தற்சமயம் தவிர்க்கலாம் என பரிந்துரை செய்தனர். மேலும் இந்த பங்கினை வைத்திருப்பவர்கள் லாபத்தை பதிவு செய்வது குறித்து யோசிக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனந்த் ரதியின் ஜிகேர் படேல் கூறுகையில், தற்போதைய விலையில் இந்த பங்கை வர்த்தகர்கள் தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications