அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. பிளாக்ராக் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான ஐஷேர்ஸ் டூ பப்ளிக் லிமிடெட் மூலம் 207 கோடி ரூபாய் மதிப்புக்கு பங்குகளை வாங்கியுள்ளது. ஐஷேர்ஸ் (iShares II Public Ltd) என்பது பிளாக் ராக் நிர்வகித்து வரும் பரிமாற்ற வர்த்தக நிதிகளின் தொகுப்பாகும்.
பிளாக்ராக் என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு நிறுவனம். இது 10 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 38 நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மியூச்சவல் பண்ட் மற்றும் ஸ்டாக் ப்ரோகிங் சேவைகளை துவங்க முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பிளாக்ராக் இணைந்து "ஜியோ பிளாக்ராக்" என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அம்பானியின் கூட்டாளியாக பிளாக்ராக் பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை , வாங்குவது அல்லது விற்பது என்பது முதலீட்டாளர்களால் உற்றுநோக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் இரண்டு நிறுவன பங்குகளை ஓபன் மார்க்கெட் டிரான்ஸாக்சன் முறையில் வாங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களின் படி, ஐஷேர்ஸ் குளோபல் வாட்டர் யுசிஐடிஎஸ் நிதி, எலக்ட்ரோஸ்டீல் கேஸ்டிங்ஸ் (Electrosteel Castings) நிறுவனத்தில் 32.28 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 196.21 ரூபாய் என்ற வகையில் மொத்தம் 63.35 கோடிக்கு பங்கு வர்த்தகம் நடந்துள்ளது.
அதே போல ஐஷேர்ஸ் குளோபல் கிளீன் எனர்ஜி நிதி , பிடிசி இந்தியா (PTC India) லிமிடெட் மூலம் 27.50 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. ஐஷேர்ஸ் குளோபல் கிளீன் எனர்ஜி யுசிஐடிஎஸ் நிதி மூலம் 38.67 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. மொத்தமாக பிடிசி இந்தியா லிமிடெட்டில் ஒரு பங்கின் மதிப்பு 217.53 ரூபாய் என்ற வகையில் 143.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இந்த இரண்டு பங்கு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 207.30 கோடி ரூபாய் ஆகும்.பிளாக்ராக் நிறுவனம் பல்க்காக பங்குகளை வாங்கியதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஏப்ரல் 19 பங்குச்சந்தையில் உயர்வு கண்டன. பிடிசி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 234.05 ரூபாய் என 11.29% உயர்ந்தது. அதே போல எலக்ட்ரோஸ்டீல் கேஸ்டிங் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 196.80 ரூபாய் என 4.46% உயர்ந்தது.
அதே போல மும்பை பங்குச்சந்தையிலும் ஜிஎம்ஆர் பவர் அண்ட் அர்பன் இன்ஃபிரா நிறுவனத்தின் பங்குகள் ஓபன் மார்க்கெட் டிரான்ஸாக்சன் முறையில் 45 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. வின்ரோ கமர்ஷியல் இந்தியா 39.92 லட்சம் பங்குகளையும், சிங்குலாரிட்டி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 40 லட்சம் பங்குகளையும் வாங்கி குவித்துள்ளன. ஒரு பங்கின் மதிப்பு 57.30 ரூபாய் என்ற அளவில் மொத்தம் 45.80 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications