ரூ.10க்கு கீழ் உள்ள ஒரு பென்னி ஸ்டாக்கும், ஸ்மால் கேப் நிறுவனமுமான விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் தற்போது அடிக்கடி முதலீட்டாளர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இந்நிறுவனம் பல வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்கி குவித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.
விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் பிளாஸ்டிக், செயற்கை மற்றும் இயற்கை ரப்பருக்கான பாலிமர், ரப்பர் கலவைகள் மற்றும் சேர்மான பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில், இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிசிஸ் கேஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திரபிரஸ்தா கேஸ் இணைந்து ஸ்மார்ட் மீட்டர் உற்பத்தி செய்வதற்காக ஐஜிஎல் ஜெனிசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற கூட்டு வர்த்தக நிறுவனத்தை தொடங்கியது.
விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் தற்போது புதிய வணிகத் துறைகளில் ஈடுபடும் நோக்கில், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, துபாயை சேர்ந்த போர்ட்போலியோ மேனேஜிங் ஈவென்ட்ஸ் நிறுவனமான பிஎம்இ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை ரூ.100 கோடிக்கு விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியது. பிஎம்இ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள ஒரு சர்வதேச பொழுதுபோக்கு நிறுவனமாகும்.
தற்போது, துபாயில் பிரபலமான நைட் கிளப்பான ஸ்கை 2.0 கிளப் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை சுமார் ரூ.650 கோடிக்கு கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. துபாய் டிசைன் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள ஸ்கை 2.0 கிளப், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி இரவு கிளப்பாகும்.
உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு மற்றும் குறைபாடு இல்லாத சேவையுடன் மறக்க முடியாத இரவுகளுக்கு ஸ்கை 2.0 நைட் கிளப் உத்தரவாதம் அளிக்கிறது. இந்நிறுவனம் (ஸ்கை 2.0 கிளப்) கடந்த 2023ம் ஆண்டில் வணிகத்தின் மூலம் பெறப்பட்ட வருவாயில் சுமார் 2.21 கோடி அமெரிக்க டாலரை பதிவு செய்துள்ளது.
மேலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாப வரம்பு 38.80 சதவீதம் மற்றும் வருவாயில் 36 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
விகாஸ் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் சமீபகாலமாக பல வெளிநாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களின் பங்குகளை கையகப்படுத்தி வருவது தனது வர்த்தகத்தை பல்வகைப்படுத்துதல் மற்றும் புதிய துறைகளில் அற்புதமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி காண வேண்டும் என்ற அந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த சனிக்கிழமையன்று விகாஸ் லைஃப்கேர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.89 சதவீதம் குறைந்து ரூ.6.70ஆக இருந்தது. 2023 மே 24ம் தேதியன்று இந்நிறுவன பங்கு 52 வார குறைந்தபட்சமாக ரூ.2.66ஐ எட்டியது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 150 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications