மும்பை: ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 80 ஸ்மால் கேப் நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 64% வரை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஜூன் மாதத்தில் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான முதல் வார காலத்தில் இந்திய பங்குச் சந்தைகள் மிகப்பெரிய உச்சத்தையும் அதனை தொடர்ந்து வீழ்ச்சியையும் சந்தித்தன.

ஜூன் மூன்றாம் தேதி மாதத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உச்சத்தை தொட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி சரிவடைந்தன.
இருப்பினும் ஐந்தாம் தேதியிலிருந்து பங்குச் சந்தை அந்த வீழ்ச்சியிலிருந்து படிப்படியாக முன்னேற தொடங்கியது. ஒட்டுமொத்தமாக ஜூன் முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனங்களின் குறியீடுகள் 3 சதவீதம் வரை உயர்வை கண்டன.
கடந்த வாரம் முழுவதும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 3.69% உயர்ந்தது, நிஃப்டி 50 குறியீடு 3.37% உயர்ந்தது. ஜூன் முதல் வாரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 76,795.31 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. அதேபோல நிப்டியும் 23,338.70 என்ற உச்சத்தை தொட்டது.
நிஃப்டி இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்டெக்ஸ் 8.6%, FMCG இன்டெக்ஸ் 7%, ஆட்டோ இன்டெக்ஸ் 6.8% உயர்ந்தன. இருப்பினும் நிஃப்டி பிஎஸ்யூ பேங்க் இன்டெக்ஸ் மட்டும் 1.4 % சரிவை கண்டது. அதேவேளையில் முதல் வார காலத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட 13,718.42 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய ஈக்விட்டி சந்தையில் 5,578.71 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கின.
சந்தையில் அதிகபட்ச ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டிருந்தாலும் முதல் முறையாக நிஃப்டி 50 இண்டெக்ஸ் வார இறுதியின் போது கிட்டதட்ட 23 ஆயிரத்து 300 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது என ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஓஷோ கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மும்பை பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் இன்டெக்ஸை பொருத்தவரை 3 % உயர்ந்துள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods), பிடிசி இண்டஸ்ட்ரீஸ் (PTC Industries), ஆதம் இன்வெஸ்ட்மெண்ட் (Authum Investment & Infrastucture), வி மார்ட் ( V-Mart Retail) பாகிராத் கெமிக்கல்ஸ் ( Bhagiradh Chemicals and Industries), உள்ளிட்ட நிறுவனங்கள் 20 முதல் 64 % வரை உயர்வை கண்டன.
ஆனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (Jaiprakash Associates) , டிடாகர்ஹ் ரயில் சிஸ்டம்ஸ் (Titagarh Rail Systems), டெக்னோ எலக்ட்ரிக் & இன்ஜினியரிங் கம்பெனி (Techno Electric & Engineering Company), ட்ரூகேப் ஃபைனான்ஸ் (TruCap Finance), நிறுவனங்கள் 30 சதவீதம் வரை சரிவை கண்டன.
இதனிடையே நிஃப்டி 50 இன்டெக்ஸ் 23,500 முதல் 23,600 வரை இந்த வாரம் செல்ல கூடும் என்றும் ஆனால் 23,000 வரை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எல்கேபி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ரூபக் தே தெரிவித்துள்ளார்.
ஹெச்டிஎப்சி செக்யூரிட்டி நிறுவனத்தின் நாகராஜ் செட்டி கூறுகையில் இந்த வாரத்தில் நிஃப்டி 50 சற்றே சரிவடைந்து ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் இது முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications