இந்திய பங்குச் சந்தைகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மேற்கொண்ட போது அதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
சோமேட்டோ நிறுவன பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.169 வரை சென்றது. பேடிஎம் பங்கு விலை தனது உச்ச அளவான ரூ.1,955ஐ தொட்டது. ஆனால் அதன் பிறகு அந்த நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து கடும் சரிவை சந்தித்தன.

அந்நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்ட கணக்கை காட்டி வந்ததே இதற்கு காரணம். இந்நிலையில் சமீபகாலமாக சோமேட்டோ மற்றும் பேடிஎம் பங்குகள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு சமீபத்திய காலாண்டுகளில் அந்த நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, செலவுகள் குறைந்தது மற்றும் லாபம் குறித்த நம்பிக்கை போன்றவையே காரணமாக உள்ளது.
கடந்த ஒராண்டில் சோமேட்டோ பங்கு விலை 68 சதவீதமும், பேடிஎம் பங்கு விலை 39 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை சோமேட்டோ பங்கு விலை 79 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பேடிஎம் பங்கு விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த நிறுவன பங்குகள் இன்னும் தங்களது அதிகபட்ச விலையை தாண்டவில்லை.
சோமேட்டோ பங்கின் விலை தற்போது தனது உச்ச அளவான ரூ.169ஐ காட்டிலும் 37 சதவீதம் பின்தங்கி உள்ளது. பேடிஎம் பங்கு விலை தற்போது தனது அதிகபட்சமான ரூ.1,955ஐ காட்டிலும் 55 சதவீதம் குறைவாக உள்ளது. இந்நிறுவனங்களின் சமீபத்திய காலாண்டு நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தால் அந்த பங்குகளின் விலை அதிகரித்தது.
சோமேட்டோ கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் இன்னும் தனது செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிடவில்லை. அதேசமயம் பேடிஎம் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.292 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது.
இருப்பினும் சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது பேடிஎம் நிறுவனத்தின் நஷ்டம் 49 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சோமேட்டோ மற்றும் பேடிஎம் ஆகிய இரண்டு நிறுவனங்களில் எது நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்தது என்பது குறித்து நிபுணர்கள் கருத்தை தெரிந்து கொள்வோம். வென்ச்சுரா செக்யூரிட்டிஸின் தலைவர் வினித் பொலின்கர் கூறுகையில், நாட்டின் வளர்ந்து டிஜிட்டல் பொருளாதாரத்தின் காரணமாக சோமேட்டோ மற்றும் பேடிஎம் இரண்டும் கணிசமான வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டுள்ளன. இருப்பினும், எங்கள் விருப்பம் சோமேட்டோ தான். ஏனென்றால் உணவு விநியோகத் துறையில் குறைந்த போட்டி அழுத்தம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
ரைட் ரிசர்ச்சின் நிறுவனர் மற்றும் நிதி மேலாளரான சோனம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், நீண்ட கால முதலீட்டுக்கு நான் சோமேட்டோவை பரிந்துரைக்கிறேன். ஆன்லைன் விநியோக துறையில் சோமேட்டோ நிலையான வளர்ச்சியை காட்டியுள்ளது மற்றும் குறிப்பிடத்தக்க சந்தை பங்கினை கொண்டுள்ளது. மேலும் பலசரக்கு பொருட்கள் விநியோகம் போன்ற துறைகளிலும் களம் இறங்கியுள்ளது. அதேசமயம் பேடிஎம் நிறுவனம் தனது துறையில் போட்டி மற்றும் ஒழுங்குமுறை சவால்களை அது எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார்.
ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் நிறுவனம் சோமேட்டோ மற்றும் பேடிஎம் ஆகிய இரண்டு நிறுவன பங்குகளையும் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உக்தி நிபுணர் வி.கே. விஜயகுமார் கூறுகையில், சோமேட்டோ மற்றும் பேடிஎம் ஆகிய பங்குகளுக்கும் நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானத்தை அளிக்கும் திறன் உள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications