மும்பை: இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெரிய இறக்கம் கண்டு வருகிறது. சில வர்த்தக நாட்களுக்கு முன் தான் இந்தியச் சந்தைகள் வரலாறு காணாத நல்ல உச்சங்களையும் தொட்டது. அப்படி புதிய உச்சங்களைத் தொடத்தொட மேலும் முன்னேறாமல் ஏன் கீழே வந்துவிடுகிறது.
அப்படி என்றால் இந்திய பங்குச் சந்தைகளை இழுத்துப் பிடிக்கும் அந்த மாய சக்தி என்ன..? ஏன் இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன..? எனப் பார்ப்போம்.

1. அமெரிக்க சீன வர்த்தகப் போரால் மொத்த உலகப் பொருளாதாரமும் ஸ்தம்பித்துவிட்டது. இந்த ஒரு செய்தியால் மட்டும் உலகில் உள்ள அனைத்து பங்குச் சந்தைகளும் ஒரு வலுவான இறக்கத்தைச் சந்தித்தன. அதே பாதிப்பு தான் இந்தியாவுக்கும். இது தான் இந்திய சந்தையின் சரிவுக்கு முழு முதல் காரணம்.
2. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மையால், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் தைரியமாக இந்தியாவில் முதலீடு செய்ய மறுக்கிறார்கள். சொல்லப் போனால் செய்த முதலீடுகளை, வந்த வரை லாபம் என விற்று,வழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் சுமார் 9000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்திருந்தார்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள். இப்போது வரை சுமார் 700 கோடி ரூபாயை விற்று வெளியேறி இருக்கிறார்கள். இந்திய சந்தை சரிவுக்கு இது 2-வது பெரிய காரணமாக இருக்கிறது.
3. மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் ஏறத்தாழ மந்தமாகத் தான் இருந்தது. ஒரு சில நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களின் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் தப்பித்தோம் பிழைத்தோம் ரேஞ்சில் தான் இருந்தது. ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் படுத்தே விட்டதைய்யா ரேஞ்சில் தான் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. சந்தையை நகர்த்த நல்ல வலுவான ட்ரிக்கர் செய்திகளும், அதனால் ஏற்படும் மொமெண்டமும் இல்லை என்றால் சந்தை எப்படி மேலே உயரும்..?
4. இந்தியப் பொருளாதாரத்தில் போதுமான வேலை இல்லை. வேலை இல்லாததால் மக்கள் கையில் போதுமான வருமானம் இல்லை, வருமானம் இல்லாததால் மக்கள் எதையும் வாங்க மறுக்கிறார்கள். வாங்க ஆள் இல்லாததால் பொருட்களுக்கான தேவை மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்திய ஜிடிபியே சரிந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை (Demand) இப்போது இந்திய பொருளாதாரத்துக்கு தேவை..!
5. மக்களவைத் தேர்தல். தொடக்கத்தில் மோடி ஜெயிப்பார், மீண்டும் பெரும்பான்மை பெறுவார் என்கிற கணிப்பில் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருந்த இந்திய சந்தைகள் தற்போது மோடிக்கு இருக்கும் எதிர்ப்பலைகளைப் பார்த்து, மோடி மீண்டும் ஜெயிப்பது கடினம் தான், தொங்கு பாராளுமன்றம் வரலாம், என பயந்து கொண்டிருக்கிறார்கள். மோடியோ, ராகுலோ, தனிப்பெரும்பான்மையோடு யார் ஆட்சிக்கு அமைத்தாலும் மீண்டும் சந்தை உயரும் என எதிர்பார்க்கலாம். எனவே இன்னும் இரண்டு கட்ட தேர்தல் பாக்கி இருக்கிறது. இவைகள் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியானால் தான் சந்தையில் ஒரு நிலைத் தன்மை வரும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications