இந்திய பங்குச்சந்தையில் வங்கித்துறை சார்ந்த பங்குகள் மீது எப்போதுமே தனி கவனம் இருக்கும். வங்கி சார்பாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுமே அந்த பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த வகையில் ஒரு முக்கியமான தனியார் வங்கியின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 11 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கிகளில் யெஸ் வங்கி முக்கிய இடம் வகிக்கிறது. இந்த யெஸ் வங்கியை கைப்பற்றுவதில் ஜப்பானை சேர்ந்த எஸ்எம்பிசி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்தியாவில் யெஸ் வங்கி பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து கணிசமான பங்குகளை வாங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தையில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு திடீரென 11 சதவீதம் சரிவை கண்டது. ஒரு பங்கின் மதிப்பு 21 ரூபாய்க்கும் கீழ் சென்றது. இந்த நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சுமார் 3% பங்குகளை வேறொரு நிறுவனத்திற்கு பிளாக் டீல் முறையில் விற்பனை செய்து விட்டதாக தகவல் வெளியானதை அடுத்து தான் யெஸ் வங்கியின் பங்குகள் திடீரென சரிவை கண்டன.
எந்த நிறுவனம் தன்னிடம் இருந்த பங்குகளை யாருக்கு விற்பனை செய்தது என்று அதிகாரப்பூர்வமான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. யெஸ் வங்கியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் கணிசமான அளவு பங்குகளை வைத்திருந்தது .அதில் சுமார் 13 சதவீத பங்குகளை கடந்த மாதம் தான் ஜப்பானை சேர்ந்த எஸ்எம்பிசி நிறுவனத்திடம் ஒரு பங்கின் மதிப்பு 21.50 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. அடுத்த 12 மாதங்களுக்குள் இந்த பங்கு பரிவர்த்தனை முழுமையாக நடைபெற்று முடியும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழலில் யெஸ் வங்கியில் பங்கு வைத்திருக்கும் மற்றொரு இந்திய நிறுவனம் தன்னுடைய பங்குகளை விற்பனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தவிர கோடக் மகேந்திரா வங்கி ,ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்தமாக யெஸ் வங்கியில் 11.34% பங்குகளை தங்களுக்கு சொந்தமானதாக வைத்திருக்கின்றன. அதேபோல தனியார் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனங்களும் யெஸ் வங்கியில் கணிசமான அளவு பங்குகளை வைத்திருக்கின்றன.
யெஸ் வங்கியின் வாரிய குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வங்கி செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்காக கூடுதலாக நிதி திரட்டுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உறுப்பினர்கள் வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவும் பங்கு மதிப்பு சரிய காரணம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பிசினஸ் டுடேவுக்கு பேட்டி அளித்துள்ள பங்குச்சந்தை நிபுணரான அருண் கெஜ்ரிவால் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 20 இலிருந்து 23 ரூபாய் என்ற அளவை எட்டிய பிறகு அது தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். 23 என்ற அளவை கடந்து விட்டால் அதன் வளர்ச்சியை நாம் காணலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் மேலாளர் ஹர்பித் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 24 ரூபாய் என்ற அளவை எட்டிய பிறகு வளர்ச்சி பாதையில் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். இந்த வங்கி தன்னுடைய சவால் மிக்க காலத்தில் இருந்து கடந்து வந்துவிட்டது என்றும் கூறுகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications