இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான BYJU'S கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், தற்போது புதிய பிரச்சனையாக வாடகை கூட செலுத்த முடியாத காரணத்தால் BYJU'S-க்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட டியூஷன் சென்டர் வர்த்தக பிரிவின் கிளைகள் மூடப்பட்டு உள்ளது. ஏன் மூடப்பட்டது என்பது தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாகும்.
பைஜூஸ் நிர்வாகம் கடந்த 2-3 மாதங்களாகத் தனது டியூஷன் வர்த்தக கிளைகளுக்கான வாடகை மற்றும் மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தால், BYJU'S மையங்கள் இயங்கி வந்த வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் அந்த நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள BYJU'S Tuition Centre கிளைகள் இதுபோன்ற காரணங்களால் மூடப்பட்டுள்ளன. இதேபோல் நாட்டின் பிற நகரங்களில் இருக்கும் நில உரிமையாளர்கள் BYJU'S நிறுவன கிளை மூடும் வகையில் பூட்டுப்போட்டு உள்ளனர்.
BYJU'S Tuition Centre இயங்கும் வரும் கட்டிடம் அல்லது இடத்திற்கு பைஜூஸ் நிர்வாகம் வாடகை செலுத்தாதது மட்டும் அல்லாமல் அடிப்படை சேவையான தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் மற்றும் குப்பை அகற்றுதல் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்தவில்லை என இன்க்42 தெரிவித்துள்ளது. மேலும், இந்த டியூஷன் சென்டர்களுக்கான வாடகையும் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், BYJU'S Tuition Centreகள் மூடப்படுவது குறித்த செய்திகளுக்கு பைஜூஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. பைஜூஸ் நிர்வாகம் இந்தியா முழுவதும் மொத்தம் 292 டியூஷன் கிளைகள் கொண்டு இருந்த நிலையில் தற்போது பல கிளைகள் மூடப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாதம் பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பைஜூஸ்-ன் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் கீழ் இயங்கும் இந்திய வணிகத்தின் அன்றாட நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் பைஜூ ரவீந்திரன் எடுத்துக்கொண்டார்.
பைஜூ ரவீந்திரன் நிர்வாக பொறுப்பைக் கையில் எடுத்த பின்பும் பைஜூஸ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. BYJU'S Tuition Centreகள் மூடப்பட்டது மூலம் இந்த கிளைகளில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications