மத்திய அரசுக்கு மிகப் பெரிய வருவாய் வரும் வரிகளைப் பட்டியல் போட்டால், அதில் சரக்கு மற்றும் சேவை வரிக்கு என்று தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூலே அரசு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

இருப்பினும், கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும், சிறு குறு தொழில்முனைவோர்களின் வியாபார பிரச்சனைகளை ஓரளவுக்காவது தீர்க்க சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள்.
இன்று சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 40-வது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தான் MSME தரப்பினருக்கான சில ஜிஎஸ்டி தளர்வுகளை அறிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர்.
ஜிஎஸ்டி வரி பாக்கி இல்லாதவர்கள், தாமதமாக GSTR-3B படிவத்தைச் சமர்பித்தால், அதற்கு எந்த ஒரு தாமத கட்டணமும் செலுத்த வேண்டாமாம்.
அதோடு, இனி சரக்கு மற்றும் சேவை வரிக்கான மாதாந்திர படிவங்களை தாமதமாக தாக்கல் செய்தால், அதற்குச் செலுத்த வேண்டிய தாமத கட்டணத்தைக் 500 ரூபாயாக குறைத்து இருக்கிறார்களாம். இது ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரை பொருந்துமாம்.
அதே போல சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்ய வேண்டிய சிறு கம்பெனிகள், தாமதமாக தாக்கல் செய்தால், அவர்கள் அரசுக்கு, தாமதமாகச் செலுத்துவதற்கு வட்டி செலுத்த வேண்டும். அந்த வட்டி விகிதத்தை 9 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்களாம். இது மே 2020 ஜூலை 2020 வரை பொருந்துமாம்.
இது எல்லோருக்கும் பொருந்துமா என்று கேட்டால் இல்லை. ஐந்து கோடி ரூபாய்க்குள் டேர்ன் ஓவர் செய்யும் சிறு கம்பெனிகளுக்கு மட்டுமே பொருந்துமாம்.
அதே போல இந்த 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பதைப் பற்றி விவாதிக்கவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தாமதமாக சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்பவர்களுக்கு தாமத கட்டணம், அபராதம் போன்றவைகளை குறைப்பதை வரவேற்கிறோம். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்திலும் ஏதாவது மாற்றம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அதையும் அரசு ஆராயும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications