இந்தியா தனது 80ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி வருகிறது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்த நாளை தான் நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த போது தங்கம் விலை என்ன? இந்த 80 ஆண்டுகளில் அது எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை சுமார் 88.82 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையில் இருந்தனர். அவர்களுக்கு இதுவே மிகப்பெரிய தொகை. நாடும் கிட்டதட்ட பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி தான் இன்று உலகின் முக்கியமான பொருளாதார நாடாக திகழ்கிறது.

அந்த வகையில் 1947ஆம் ஆண்டில் தங்கத்தில் 1,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், சுமார் 112.5 கிராம் தங்கம் வாங்கியிருக்க முடியும். தற்போதைய சந்தை நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1,51,000 ரூபாய்க்கும் மேல் உள்ளது. இதனை வைத்து கணக்கிட்டால் சுமார் 17 லட்சத்திற்கும் மேல் இருக்கும். அதாவது 1947ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை சுமார் 1,711 மடங்கு உயர்ந்துள்ளது. நம் 1000 ரூபாய் முதலீடு 17 லட்சம் ரூபாயாக வளர்ச்சி அடைந்திருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 9.9 சதவீத வளர்ச்சியை தங்கம் தந்திருக்கிறது.
இதுவே வெள்ளியின் விலை என கணக்கிட்டு பார்த்தால் தங்கத்தை போல 1947ஆம் ஆண்டு விலை நிலவரம் இல்லை. ஆர்பிஐ தரவுகளின் படி வெள்ளி விலை 1970களில் ஒரு கிலோ வெறும் 536 ரூபாய் தான், இன்று ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சமாக உள்ளது. அப்படி என்றால் வெள்ளி விலை 400 மடங்கு விலை கூடியுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் மாற்றங்களை கண்டுள்ளது. 1991ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல், உலகளாவிய சந்தை மாற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. கொரோனா தொற்று, உலக நாடுகளிடையே நிலவும் மோதல்களும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துக்கு காரணமாக அமைந்துள்ளன.
பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் ஒரு சொத்தாக செயல்பட்டிருக்கிறது. குறிப்பாக, உலகளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலில், தங்கம் தனது முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்கும் ஒரு சிறந்த கருவியாக திகழ்கிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிகமாக தங்கம் வாங்கி வைக்க தொடங்கியுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை நம் குடும்பங்களிடமே 25,000 டன்களுக்கும் மேலான தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக இந்திய குடும்பங்கள் பத்திரமாக சேமித்து வைக்கும் ஒரு சொத்து. நம் கலாசாரத்திலும் தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. காலம் மாறினால் தங்கத்தின் மீது நமக்கு இருக்கும் மதிப்பு துளியும் மாறவில்லை.


Click it and Unblock the Notifications

