புகழ் பெற்ற தொழிலதிபரும் ஆர்பிஜி குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் கோயன்கா தங்கம் குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்வு குறித்து தான் உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டு வரலாறு காணாத பல உச்சங்களை எல்லாம் தொட்டுவிட்டது.
சென்னையில் ஒரு சவரன் நகை வாங்க ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம் . இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரனுக்கு தங்க நகையின் விலை என்பது கிட்டத்தட்ட 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சமாக மாறிவிட்டது.

இதனை அடுத்து பலரும் தங்கம் விலை இன்னும் உயரும் எனவே தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக அறிவுரை வழங்கி வருகின்றனர். புகழ் பெற்ற தொழிலதிபரும் ஆர்பிஜி குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் கோயன்கா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவில் 1990 ஆம் ஆண்டில் ஒரு கிலோ தங்கம் வைத்திருந்தால் மாருதி 800 காரை வைத்திருந்ததற்கு சமம் என கூறியுள்ளார்.
2000ஆம் ஆண்டில் 1 கிலோ தங்கம் வைத்திருந்தால் ஒரு எஸ்டீம் கார் வைத்திருந்ததற்கு சமம், 2005இல் 1 கிலோ தங்கம் வைத்திருந்தால் இன்னோவா கார், 2010இல் 1 கிலோ தங்கம் வைத்திருந்தால் ஃபார்ட்ச்சூனர் கார் வைத்திருந்ததற்கு சமம் என கூறியுள்ளார்.
2019இல் 1 கிலோ தங்கம் மதிப்பு பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பதற்கு சமம், 2025இல் லேண்ட் லோவர் கார் வைத்திருப்பதற்கு சமம் என கூறியுள்ள அவர் இதில் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் 2030இல் உங்களிடம் ஒரு கிலோ தங்கம், இருந்தால் அது ரோல்ஸ் ராயஸ் கார் வைத்திருப்பதற்கு சமம் என கூறியுள்ளார்.
2040ஆம் ஆண்டில் உங்களிடம் 1 கிலோ தங்கம், இருந்தால் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருப்பதற்கு சமமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதாவது தங்கத்தின் மதிப்பு 1990இல் இருந்து எவ்வளவு மடங்கு உயர்ந்துள்ளது என்பதையும் எதிர்காலத்தில் எவ்வளவு உயர்ந்திருக்கும் என்பதையுமே இவரது பதிவு சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய தேதியில் 24 கேரட் தங்கம் 1 கிலோவின் மதிப்பு 1.25 கோடி ரூபாய். அந்த வகையில் 1 கிலோ தங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இன்றைக்கு கோடீஸ்வரர்கள். உலகளவில் எந்த ஒரு பொருளும் இப்படி நிலையான வளர்ச்சியை பெற்றது இல்லை என்பதாலேயே இது பாதுகாப்பான முதலீடு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications