2008 நவம்பர் 26ம் தேதியன்று கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஒபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் உயிர் இழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு சிக்கினார். விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மும்பை தாக்குதல் நடந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அந்த சோகமான நிகழ்வு விட்டுச் சென்ற வடுக்கள் அதனை கண்டவர்களின் நினைவில் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த தாக்குதல் கற்றுக் கொடுத்த பாடங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகளாவிய பாதுகாப்பிற்கு முக்கியமானவை.
இன்று மும்பை தாக்குதலின் 15வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், தீவிரவாதிகளுடன் போரிடும் போது உயிர் இழந்த மக்களையும் பாதுகாப்பு படையினரையும் தேசம் நினைவு கூர்கிறது.
இந்நிலையில், இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக, லஷ்கர் இ தொய்பாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்காத நிலையிலும் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்கர் இ தொய்பாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் முறையான கோரிக்கையின்றி சுதந்திரமாக முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவோர் கிலான் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா மீதான தடை சரியான விஷயம். இஸ்ரேலில் எல்இடி ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படவில்லை என்பதை எனது துணை அதிகாரி கண்டறிந்த பிறகு, சில மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பை எங்கள் நாடு தடை செய்ய முடிவு செய்தது என்று தெரிவித்தார்.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலை குறிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன் உள்ள உடைந்த நாற்காலியில் ஒரு நாள் முழுவதும் போஸ்டர் கண்காட்சி நடந்தது. இதனை ஏற்பாடு செய்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான பிரியஜித தேப்சர்கர் கூறுகையில், இன்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிதி மையமான மும்பையை உலுக்கிய பெரிய மற்றும் பயங்கரமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூரும் வகையில் நாங்கள் இங்கு நிறைய சமநிலையை காட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications