
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே வானம் பார்த்து வந்தது மத்திய அரசு. ஆனால், ஜூன் மாதமும் கடந்து ஜூலை மாதத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை சராசரியாகப் பெய்ய வேண்டிய மழையளவில் பாதியளவு கூட பெய்யவில்லை.
இதனால் 2011-12ம் ஆண்டில் நாடு உற்பத்தி செய்த 257 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியில் 70 சதவீதத்தைக் கூட இந்த ஆண்டு உற்பத்தி செய்ய முடியாது என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு விளை நிலங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.
அடுத்த ஒரு வாரமும் மழை பெய்யாவிட்டால் நிலைமை மிக மிக மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டால் அதை ஒட்டிய பிற துறைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் மேலும் மோசமாகும் சூழலும் உள்ளது.
இதையடுத்து வறட்சி நிலை உருவாகிவிட்டதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக சில முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
வறட்சி நிலைமை குறித்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகளும் மாநில அரசுகளுடன் வாரந்தோறும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் வறட்சியை சமாளிக்கத் தேவையான திட்டங்களைத் தயாரிக்குமாறும் அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாநிலங்களில் கவனம் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications