டெல்லி: நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ள நிலையில், மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி கட்டணத்தை குறைத்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் நிலவும் பணவாட்டத்தின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் குறைந்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை மாலையில் அரசு வெளியிட்ட அறிக்கையில் 10 கிராம் தங்கத்திற்கான இறக்குமதி கட்டணத்தை 375 டாலராகவும், 1 கிலோ வெள்ளிக்கு 512 டாலராகவும் குறைத்துள்ளது.
மார்ச் மாத துவக்கத்தில் தங்கத்தின் இறக்குமதி கட்டணம் 393 டாலராகவும், வெள்ளிக்கு 549 டாலராகவும் இருந்தது. இக்கட்டண குறைப்பின் மூலம் இந்தியாவில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறையும் என நாணயச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதக் காலத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,162 டாலரில் இருந்து 1,158.60 டாலராக சரிந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை 15.64 டாலர் அளவில் குறைந்தது.
உலகளவில் அதிகளவிலான தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications