டெல்லி: மார்ச் மாத முடிவில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 11.79 பில்லியன் டாலர் உயர்ந்ததை அடுத்து மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி கட்டணத்தை 10 கிராம் தங்கத்திற்கு 388 டாலராக உயர்த்தியுள்ளது. இதுவரை இது 385 டாலராக இருந்தது.
இந்தியாவில் வெள்ளி மீதான வர்த்தகம் குறைந்துள்ளதால் இதனை மேம்படுத்த இறக்குமதி கட்டணத்தை ஒரு கிலோவிற்கு 524 டாலராகக் குறைத்துள்ளது. இதுவரை இது 543 டாலராக இருந்தது.

இதன் படி கட்டண மாற்றங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 3 டாலர் வரை, அதாவது 180 ரூபாய் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய இறக்குமதி கட்டணங்களுக்கான அறிக்கையை நிதியமைச்சகத்தின் ஒப்புதல்களுடன் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை வெளியிட்டது.
இந்திய சந்தையில் தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் சிங்கப்பூர் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.4% உயர்ந்து 1,207.70 டாலராகவும், வெள்ளி 0.3 சதவீதம் உயர்ந்து 16.40 டாலராக உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தாக அதிக மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் தங்கம் உள்ளது.


Click it and Unblock the Notifications