சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்ததாலும், அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படுவதாலும், புல்லியன் சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு அளவை அதிகளவில் குறைத்து வருகின்றனர்.
மேலும் உள்நாட்டுச் சந்தையில் தீபாவளி மற்றும் தசரா போன்ற முக்கியமான பண்டிகைகள் முடிந்ததால், வெள்ளிக்கிழமை, சில்லறை விற்பனை சந்தையில் தங்கத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதித்தது.

அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் நாணயங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் இந்திய சந்தையில் தங்கம் மீதான முதலீடு கணிசமாகக் குறைந்தது.
தங்கப் பத்திர முதலீட்டுத் திட்டங்களின் செய்யப்பட்ட முதலீடு குறித்து மத்திய அரசு முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 2,418 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் கிராமிற்கு 9 ரூபாய் குறைந்து 2,586 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 330 ரூபாய் குறைந்து 34,335 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications