மும்பை: வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி நடத்தப்பட்ட விவாதங்கள் சாதகமாக இருந்ததாலும், எப் அண்ட் ஓ சந்தையில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியதாலும் இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் 2 நாள் சரிவில் இருந்து மீண்டு 180 புள்ளிகள் உயர்வை எட்டியது.

அதுமட்டும் அல்லாமல் இந்திய சந்தையில் இருக்கும் தொடர் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சாதகமான நாணய கொள்கை ஆகியவை இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது என மூடிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தையில் இன்று கணிசமாக முதலீடு செய்தனர்.
பெடரல் வங்கியின் அறிவிப்புகளுக்காகச் சர்வதேச முதலீட்டாளர்கள் காத்துக்கிடப்பதால் இந்திய சந்தையில் கடந்த ஒரு வாரமாக அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு நாள்தோறும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 182.89 புள்ளிகள் உயர்ந்து 25,958.63 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டியும் 52.20 புள்ளிகள் வரை உயர்ந்து 7,883.80 புள்ளிகள் என்ற அளவை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

அமெரிக்க அரசு அறிவித்த இறக்குமதி தடையால் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று 8.21 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதைதொடர்ந்து சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் பார்மா துறையைச் சேர்ந்த சிப்லா மற்றும் லூப்பின் நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.
அதேபோல் பெல், எல் அண்ட் டி, மாருதி, பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications