டெல்லி: பணியில் ஏற்படும் நெருக்கடி... அதனால் ஏற்படும் மன அழுத்தம் நோய்களின் பாதிப்பு என பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் விட்டால் போதும் என 50 வயதிலேயே வேலையை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். விருப்ப ஓய்வு பெற விரும்புவர்களின் விகிதம் குறித்து எச்எஸ்பிசி வங்கி சார்பில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பணிக்குச் செல்லும் 45 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 61 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாகவும், குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அவர்களால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஓய்வு பெற முடியாத வகையில், பணக்கஷ்டம், வாழ்க்கையில், 'செட்டில்' ஆகாத நிலை, வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் போன்ற சூழ்நிலைகளால், இவர்கள், கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலை, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் காணப்படுகிறது.
எச்.எஸ்.பி.சி., வங்கி, ஹாங்காங் நாட்டின் பிரபல வங்கி; உலகம் முழுவதும், ஆயிரக்கணக்கான கிளைகளை கொண்டுள்ள, மூன்றாவது பெரிய வங்கியாகும்.
இந்த வங்கி சார்பில் 17 நாடுகளில், 18 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஓய்வுக்குப் பின், என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, 45 வயதுக்கு மேற்பட்டோர் அளித்துள்ள பதில்களை படியுங்கள்
வேலைக்கு டாட்டா
வேலைக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் பலருக்கும் நிம்மதியில்லை வாய்ப்பு கிடைத்தால், வேலைக்கு, 'டாட்டா' காண்பிக்க, மூன்றில், இரண்டு பங்கினர் தயாராக உள்ளனர் இந்த மனநிலை கொண்டவர்களில், அர்ஜென்டினாவில் தான், 78 சதவீதம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், பிரான்ஸ், 77; சீனா, பிரிட்டன், 75; ஆஸ்திரேலியா, கனடா, 74 சதவீதம் பேர் உள்ளனர். ஓய்வுபெறும் மனநிலை மிகக் குறைவாக உள்ள நாடுகளில், எகிப்து, 15; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், 29; ஹாங்காங், 57 சதவீதமாக உள்ளது.
ஊர் சுற்றவோம்
உலகம் முழுவதும், 'ஜாலியாக' சுற்றி வரப் போகிறேன் என, 55 சதவீதம் பேர் கூறியுள்ளனர். குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்க போகிறேன் என, 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வேலையை உதறிவிட்டு நிம்மதியாக சும்மா இருக்கப் போகிறேன் என, 29 பேர் கூறியுள்ளனர்.
பணம் சேர்க்கவில்லை
சரி, எதற்காக, நீங்கள் நினைத்தது போல, ஓய்வுபெற முடியவில்லை?' என்ற கேள்விக்கு 'போதுமான பணத்தை இன்னும் சேர்க்கவில்லை' என, 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 'என்னை நம்பி ஏராளமானோர் உள்ளனர்' என, 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்
குடும்ப சூழ்நிலை
ஏராளமாக கடன் இருக்குது சார்' என, 24 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இப்படி எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் குடும்பத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. சிறு வயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை கடைப்பிடித்தால் ஓய்வு பெறும் காலத்தை நம்மால் சுயமாகத் தீர்மானிக்க முடியும் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications