டெல்லி: பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, தனது இளமை காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இணையத்தின் வழியாக நடைபெறும் பண பரிமாற்றங்களை ஒருங்கிணைக்கும் இணையதளம் பேடிஎம். இதன் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா. அவரின் அபார வளர்ச்சியை பாராட்டி டெல்லியடுத்த குர்கானிலுள்ள அமிட்டி பல்கலைக்கழகம் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இந்த விழாவில் பேசிய விஜய் சேகர் ஷர்மா, தனது இளமைக்கால நினைவுகளை அசைபோட்டார். இளமை காலத்தில் அவர் பணத்திற்கு கஷ்டப்பட்ட சம்பவங்களை அப்போது நினைவு கூர்ந்தார் விஜய் சங்கர்.
மேலும் அவர் பேசுகையில், "நான் ஹிந்தி மொழி வழி கல்வி படித்து வளர்ந்தவன் என்பதால், டெல்லியில், பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் படிப்புக்காக, 1998ல், ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்தபோது மிகவும் அச்சப்பட்டேன். வகுப்பில் என்ன பாடம் நடத்துகிறார்கள் என்பதே எனக்கு புரியாது. நான் இன்ஜினியரிங் தேறுவேன் என்ற நம்பிக்கையே இல்லாமல்தான் இருந்தது.
படித்து முடித்த பிறகும், எனக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டேன். பேடிஎம் நிறுவனத்தை தொடங்கலாம் என எனக்கு நெருக்கமானவர்களிடம் யோசனை கூறியபோது, அவர்கள் என்னை, பரிகாசம் செய்தார்கள்.
பேடிஎம் போன்ற சேவை அளிக்கும் நிறுவனம் சக்சஸ் ஆகாது என்று அவர்கள் கூறினர். ஒருவேளை அப்படி வெற்றிகரமாக மக்களிடம் சென்று சேரும், வியாபாரம் இதுவாக இருப்பின், ஏற்கனவே பலரும் அத்தொழிலை செய்திருப்பார்களே.. என்றும் சந்தேகம் வெளிப்படுத்தினர். இவ்வாறு விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications