நாட்டின் 19 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ரூ26,600 கோடி கடன் 4,738 வரி ஏய்ப்பாளர்களிடம் சிக்கியிருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மட்டும் 1,546 பேரிடம் ரூ47,350 கோடி கடன் திரும்ப செலுத்தப்படாமல் இருக்கிறது.
இப்படி வங்கிகளில் கடன்களை வாங்கிய நிறுவனங்கள் துபாயில் வைரங்களையும் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையிலும் கிரிக்கெட் டீம்களை வாங்குவதிலும் கொண்டு போய் கொட்டியிருக்கின்றனர்.

இந்திய வங்கிகளில் ரூ500 கோடிக்கும் அதிகமாக கடன் வைத்திருப்போர் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. லோக்சபாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளில் இருந்து 7,265 பேர் மொத்தம் ரூ64,434 கோடி கடன்களைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனமானது 2010-ல் பொதுத்துறை வங்கிகள் உட்பட 17 தரப்பினரிடம் இருந்து ரூ6,900 கோடி கடனாகப் பெற்றது.
இதில் ஸ்டேட் பேங் வங்கி மட்டும் ரூ1,600 கோடி கடனாக கொடுத்திருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை தலா ரூ800 கோடி,
பேங் ஆப் இந்தியா ரூ650 கோடி,
பேங்க் ஆப் பரோடா ரூ550 கோடி,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ410 கோடி கடனாக விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், ஆடிட்டர்கள், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் போர்டு உறுப்பினர்கள் இவர்களிடையேயான வலுவான நெட்வொர்க்தான் வாரா கடன்கள் நிலுவையில் இருப்பதற்கு காரணமாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ். நாகராஜன் சுட்டிக்காட்டுகிறார். இப்படியான ஒரு நெட்வொர்க்தான் இந்திய பொதுத்துறை வங்கிகளை கடன் ஏய்ப்பாளர்களிடம் சிக்கி விழிபிதுங்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications