மும்பை: சர்வதேச சந்தையின் சாதகமான சூழ்நிலை, கணிப்புகளை விடவும் அதிகமான பருவமழை, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்திரமான லாப முடிவுகள் ஆகியவை இந்திய சந்தையின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை, முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழ்நிலை அமைந்ததால் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

புதன்கிழமை வர்த்தகத்தில் 575 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் முடிந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1.88 சதவீதம் அளவில் உயர்ந்து 490 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 485.51 புள்ளிகள் உயர்ந்து 26,366.68 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 134.75 புள்ளிகள் உயர்ந்து 8,069.65 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் லார்சன் மற்றும் டியூப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததால், சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.40 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 1472.60 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
அதேபோல் எஸ்பிஐ, பெல், ஆக்சிஸ் வங்கி, ஒஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா, இன்போசிஸ், எச்டிஎப்சி, ஐடிசி, மாருதி போன்ற நிறுவனங்கள் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் லாபத்தைப் பெற்றது.


Click it and Unblock the Notifications